Headlines News :
Home » » கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஊடக சந்திப்பு

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஊடக சந்திப்பு

Written By sakara on Wednesday, May 7, 2014 | 9:19 PM

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஊடக சந்திப்பு இன்று  கல்லடிகிறீன் கார்டன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் அண்மையில் நடைபெற்ற அசாதாரண விடயங்களா பற்றி ஊடகங்களுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

அதன் எழுத்து வடிவம் 

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஊடக சந்திப்பு - 07.05.2014

பல்கலைக்கழகத்தில் மாணவர் செயற்பாடுகளையும் மாணவர் ஒன்றியத்தையும் முடக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து மாணவர் நலனில் அக்கறை செலுத்தாமல் தனது ஆதாயத்துக்காக  உபவேந்தர் செயற்பட்டு வருவது கண்கூடாக தெரிகிறது.

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக பாரிய அபிவிருத்தி நடைபெறுவதாக வெளித்தோற்றத்தை காட்டுகிறார். ஆனால் இந்த பல்கலக்கழகத்தில் நடைபெறுவது என்ன?
பல்கலைக்கழக அபிவிருத்தி என்பது எதனில் தங்கியுள்ளது 
மாணவர்களின் கல்வித்தரத்திலா இல்லை புதிதாக திறக்கப்படும் கட்டிடங்களிலா? இங்கே உதாரணமாக கலை கலாசார பீட மாணவர்களின் விரிவுரைகளுக்கு இருந்து கல்விகற்க அத்தனை மாணவர்களுக்கும் வைத்து எழுத கதிரைகள் இல்லை, செயன்முறை வகுப்புகள் ஒரே வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு அல்லது நான்கு பிரிவுகளாகவே பிரித்து கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறுகின்றது இவற்றுக்கு மேலாக யுத்த கால கிழக்கு பல்கலைக்கழக நடைமுறைகளை போலவே தற்பொழுதும் மூன்று வருட  கல்வி செயற்பாடுகள் நான்கு வருடங்களாகவும் நான்கு வருட கல்வி செயற்பாடுகள் ஐந்து வருடங்களாகவும் நடைபெறுகின்றது இவற்றிலே எங்கே கடந்த இரண்டு வருடங்களாக பல்கலைக்கழகத்தில் பாரிய அபிவிருத்தி நடைபெறுகிறது?

அரசாங்கம் பாரிய நிதியை வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக ஒதுக்குகிறது.   அத்துடன் கிழக்கு பல்கலைக்கழத்துக்காக கணிசமான நிதியை உயர்கல்வி  அமைச்சு ஒதுக்கி உள்ளது. இதை எந்த உப வேந்தர் இருப்பினும் அரசாங்கம் செய்யும். இதில் எந்த ஒரு நிதியும் தற்போதைய உபவேந்தர் அவர்களால் வெளி இடங்களில் இருந்து கொண்டுவரப்படதில்லை அனைத்துமே அரசாங்கம் ஒதுக்கிய நிதி.

இவ்வாறு இருக்க இந்த உபவேந்தர் வந்ததால்தான் பல்கலைக்கழகத்துக்கு கட்டிடங்களே வந்தது என்றும் இவர் இல்லை எனில் அபிவிருத்தியே இல்லை எனவும் பொது மக்களை நம்ப வைத்து தான் செய்யும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் ஊழலுக்கும் அபிவிருத்தி எனும் சாயம் பூசுகிறார்.
இவற்றை தட்டி கேட்க போகும் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களை அடியோடு வேரறுக்க நினைக்கிறார். முதலில் விரிவுரையாளர்கள் பழிவாங்கப்பட்டனர் பின்னர் ஊழியர்கள் தற்பொழுது தங்கள் உரிமையை கேட்கப்போன மாணவர்கள்.  

அதிலும் மாணவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகளை பகிரங்கமாக அறிவித்த பின்னரே  அவர் அதற்கு உரிய  ஒழுக்காற்று குழுவை கூட்டுகிறார் அதற்கு தற்போதைய உதாரணம் அவரை தாக்கியதாக பழி சுமத்தி விட்டு குறித்த மாணவரின் மாணவர் பதிவை ரத்து செய்து காட்டுகிறேன் என்று பகிரங்கமாக கூறி இருப்பதானது தனி மனித பழிவாங்கல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின்  இறுதி வடிவமாகும்.

கடந்த மாதம் 3௦ ம் திகதி 2ம் 3ம் வருட மாணவர்களுக்கு கல்வி  நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் மற்றும், ஏற்கனவே அனுமதி கேட்கப்பட்டு மறுக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கிடையான விளையாட்டு போட்டிகளில் பங்குபற்ற அனுமதி வேண்டும் மற்றும் அதிமேதகு ஜனாதிபதி எமது பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த போது எதற்காக எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, பொது மாணவர் சங்கத்தை கலைத்தது எதற்காக என்ற கேள்விகளை முன்வைத்து அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டமே நடத்தப்பட்டது இது மாணவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகும் .

ஒரு நாள் முழுக்க நின்றும் தன்னை சந்திக்க மறுத்த உபவேந்தர் நான்கு மாணவர்களுக்கு வகுப்பு தடை விதித்து ஒரு திட்டமிட்ட பழிவாங்கல் முயற்சியை மேற்கொண்டார்
நான்கு மாணவர்களுக்கும் வகுப்பு தடை விதிப்பதாக கூறிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“ஆரம்பக்கட்ட விசாரணையின் பொது நீங்கள் குற்றம் இழைக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளீர்
1.    பல்கலைக்கழக நிர்வாகத்தை குழப்பியதோடு பல்கலைக்கழகத்தில்  இடம்பெற்ற ஒரு அனுமதிக்கப்பட்ட நிகழ்வினை குழப்பியமை
2.    பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளே, வெளியே இருந்தும் குழப்பியமை”
ஆனால் எந்தவொரு விசாரணையும் நால்வருக்கும் நடத்தப்படவில்லை, அத்துடன் அன்றைய தினம் பல்கலைக்கழக நிகழ்வானது எந்த வகையிலும் குழப்பப்படவில்லை. அதற்கு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்திகளே சாட்சி. அன்றைய தினம் உபவேந்தர் திட்டமிட்ட வகையில் பழிதீர்க்கும் விதமாக மாணவர் தலைவர்களை இனங்கண்டு வகுப்புத்தடை விதித்துள்ளார் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்கள்
1.    மாணவர் ஒன்றிய தலைவர்
2.    கலை கலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர்
3.    வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியத்துக்கு தலைவராக முன்மொழியப்பட்ட மாணவன்
4.    வர்த்தக முகாமைத்துவ பீட “பீட அவை” மாணவர் பிரதிநிதி ஆகியோர் ஆவார்.   
         
இதனை அறிந்த மாணவர்கள் அடுத்த நாள் சிரேஷ்ட மாணவர் ஆலோசகரிடம் மேற்குறிப்பிடப்பட்ட நான்கு மாணவர்களுக்குரிய வகுப்புத்தடை உத்தரவை மீள பெறுமாறு அனைத்து மாணவர்களும் கையொப்பம் இட்டு கோரிக்கை ஒன்றை கையளித்த பொழுது அது தொடர்பாக உபவேந்தரிடம் கலந்துரையாடிய சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் உபவேந்தர் கூறியதாக பின்வரும் மூன்று நிபந்தனைகளை முன்வைத்தார்.

1.    ஊடகங்களுக்கு வழங்கிய தவறான செய்திகளுக்கு ஊடகங்களூடாக அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்
2.    அனைத்து மாணவர்களும் தன்னிடம் கையொப்பம் மூலமாக மன்னிப்பு கேட்க வேண்டும்
3.    இவை இரண்டும் இடம்பெற்றாலும் குறிப்பிட்ட நான்கு மாணவர்களுக்கும் ஒரு வருடத்துக்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என கூறினார்.
இதனை அடுத்து சம்மந்தப்பட்ட நான்கு மாணவர்களும் தங்கள் வகுப்புத்தடை தொடர்பாக மீள்பரிசீலனை செய்யுமாறு உப வேந்தருக்கு கடிதம் ஒன்றை எழுதி சிரேஷ்ட மாணவர் ஆலோசகரிடம் கொடுத்தனர் ஆயினும் உடனடியாக தன்னால் பதில் ஏதும் கூற முடியாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் உபவேந்தரை சந்திப்பதற்காக உபவேந்தர் அலுவலகத்துக்கு சென்றனர். ஆயினும் காவலாளிகள் மாணவர்களை உள்ளே செல்லாது வாயில் கதவுகளை பூட்டினர்.பின்னர் மாணவர்கள் பலவந்தமாக உள்நுழைய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதன்பிறகும் மூதவை கட்டட தொகுதியில் சுமார் 2 மணி நேரமாக காத்திருந்தும் உபவேந்தரை சந்திக்க வாய்ப்பு கிட்டவில்லை. இதற்கிடையில் தொடர்பாளர்களாக அங்கே குவிக்கப்பட்ட போலீசாரே செயற்பட்டனர். பலமுறை போலீசார் உபவேந்தரை எங்களுடன் பேசவைக்க மேற்கொண்ட முயற்சிகள் மேற்கொண்டும்  உபவேந்தரினால் அது  நிராகரிக்கப்பட்டது அத்துடன் உபவேந்தர் மாணவர்களை சந்திப்பதை விரும்பவில்லை என தலைமை போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.   

ஆயினும் மாணவர்கள் கலைந்து செல்லாது தாம் உபவேந்தரை சந்தித்தே செல்வோம் என்ற முடிவில் உறுதியாக இருந்தனர். மீண்டும் மேலதிக போலீசார் குமிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் உப வேந்தர் வீட்டுக்கு செல்ல அழைத்து செல்லப்பட்டார்.

இவ்வாறான சூழ்நிலைக்கு மத்தியிலும் மாணவர் ஒன்றிய தலைவர் தன்னை தாக்கியதாக வீண்பழி சுமத்தியது வேதனைக்குரிய விடயமாகும். நூற்றுக்கு மேற்பட்ட போலீசாரும் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் உபவேந்தரை தாக்கியதாக கூறுவது சாத்தியமற்றதுடன் அவரை தாக்கியதாக கூறி குறிப்பிட்ட இறுக்கமான சூழ்நிலையை பயன்படுத்தி தன்னை தாக்கியதாக கூறுவதானது தனிப்பட்ட பழிவாங்கல் என்பது தெட்டதெளிவாக தெரிகிறது.
இவ்வாறான செய்திகளை கூறுவதால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பற்றிய பிழையான அபிப்பிராயங்களை சமூகத்தின் மீது உபவேந்தர் விதைத்துள்ளார்.

இவ்வாறான பழிவாங்கல் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெறும் வரை மாணவர்கள் ஓய மாட்டார்கள்.

இவ்வாறான இக்கட்டான சந்தர்ப்பத்திலும் உபவேந்தர் சிங்கப்பூர் சென்றுள்ளார் இது எவ்வகையில் சரியானதாகும். இந்த செயற்பாடானது உபவேந்தரின் பல்கலைக்கழகத்தின் மீதான பொறுப்புணர்வுக்கு ஐயப்பாடை ஏற்படுத்துகிறது.  .
     
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info