மட்டக்களப்பு வலையிறவுப்பாலம் இன்று திங்கட்கிழமை (28) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வலையிறவுப் பாலத்தை உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தும் இணைந்து திறந்துவைத்துள்ளனர்.
108 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வலையிறவுப்பாலமானது படுவான்கரையையும் மட்டக்களப்பையும் இணைக்கும் பிரதான பாலம் ஆகும்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.ஸ்.உதுமாலெவ்வை, ஹாபீஸ் நசீர் அகமட், விமலவீர திஸநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் றிடோ யே ஒசிலுவன், மட்டக்களப்பு மவாட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வுக்கு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதியைமச்சர் முரளிதரன் அழைக்கப்படாமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு வலையிறவுப் பாலத்தின் திறப்பு விழா வைபவத்திற்கு மீள்குடியேற்ற பிரதியைமச்சர் முரளிதரன் அழைக்கப்படாதை கண்டித்து இன்று பொதுமக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வலையிறவுப் பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்பாலத்தின் திறப்பு விழா நிகழ்விற்கு பிரதியமைச்சர் அழைக்கப்படவில்லை என்றுக்கூறி இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் அம்மான் எங்கே', 'மட்டு. மண்ணின்; மைந்தன் அழைக்கப்படவில்லையா', 'மாவட்ட அமைச்சருக்கு அழைப்பில்லாமல் திறப்பு விழாவா' போன்ற வாசகங்கள்; எழுதப்பட்ட பதாதைதைகளை தாங்கியிருந்தனர்.
Post a Comment