ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீட் சவான், சண்டிலா ஆகியோர் கடந்த மே 16ம் திகதி கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஜூலை 30ம் திகதி இவ்வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் பிணையில் உள்ளனர்.
இதனிடையே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) சார்பில் சூதாட்டம் குறித்து விசாரிக்க ரவி சவானி நியமிக்கப்பட்டார்.
இவர் பி.சி.சி.ஐ., துணைத் தலைவர்கள் அருண் ஜெட்லி, நிரஞ்சன் ஷா அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் அறிக்கை சமர்பித்தார்.
இந்த குழு முன்பு இன்று ஸ்ரீசாந்த், அங்கீட் சவான், அமித் சிங், சித்தார்த் திரிவேதி மற்றும் ஹர்மீத் சிங் மற்றும் சண்டிலா ஆகியோர் ஆஜராகினர். தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல இவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது.
பின்னர், ஸ்ரீசாந்த் மற்றும் அங்கீட் சவானுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.