தமிழர்கள் மீன்பிடிக்கும் கடற்பரப்பான கச்சத்தீவு ராமேசுவரத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது,
1974ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தத் தீவு தாரை வார்க்கப்பட்டது. எனினும் இதற்கு இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படவில்லை.
இதனாலேயே தமிழக மீனவர்கள் அந்த கடற்பரப்பில் சென்றாலே பெரும் இன்னல்களை எதிர்நோக்கும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் கச்சத்தீவை மீண்டும் இந்தியா மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் திடுக்கிடும் வகையில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது, அது இலங்கை எல்லைப் பகுதியில் இருப்பதாக கூறி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனால் கச்சத்தீவு காலம் காலமாக ராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர்களுக்கே சொந்தமானதாக இருந்தது என்பதற்கான ஆவணங்களை சேதுபதி மன்னரின் வம்சாவழியைச் சேர்ந்த குமரன் சேதுபதி, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமான கச்சத்தீவு பகுதியில் கடலில் சங்கு குளிக்கவும், கச்சத்தீவில் அபூர்வ செடி, கொடிகளை எடுத்துக் கொள்ளவும் கடந்த 133 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் குத்தகைக்கு விட்டுள்ளனர்.
அந்த குத்தகை ஆவணங்கள் தற்போது தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த கச்சத்தீவு மற்றும் கடல் பகுதியை பயன்படுத்திக்கொள்ள ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்கள் 1880 ஆம் ஆண்டு அன்று ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி பிள்ளை, அப்துல்காதர் மரைக்காயர் ஆகியோருக்கு ரூ.700க்கு 5 வருட குத்தகைக்கு விட்டுள்ளனர். அந்த ஆவணமும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
இதுதவிர 1914ம் ஆண்டு முதல் 1941ம் ஆண்டு வரை பாம்பனைச் சேர்ந்த முகமது மீரா சாஹிபு மரைக்காயருக்கு ராமநாதபுர சமஸ்தான திவான் சுப்பையா நாயுடு குத்தகைக்கு விட்டுள்ளார்.
இந்த குத்தகை ஒப்பந்த ஆவண நகல்களையும் ராமநாதபுரம் மன்னர் சண்முகராஜேசுவர சேதுபதியின் மகன் வழி பேரன் குமரன் சேதுபதி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
Post a Comment