Headlines News :

    பார்வையாளர்கள்

    Showing posts with label logic. Show all posts
    Showing posts with label logic. Show all posts

    தர்க்கப் படலை (புதிய பாடத்திட்டம்)

    உயர்தரத்தில் அளவையியல் என்ற பாடத்தில் தர்க்கப்படலை ஒரு அலகாக புதிய பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது

    தர்க்கப் படலை /  தர்க்க வாயில்கள் 

    'தர்க்க உள்ளீடுகளை எடுத்து அவற்றைச் செயற்படுத்தி தர்க்கரீதியான வெளியீட்டை (விடையை) தருவதே தர்ப்பப்படலை ஆகும்.'

    அதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தர்க்க உள்ளீடுகளைப் பெற்று, தர்க்க வெளியீடுகளைத் தருவதற்காக தர்க்கவியல் பணியை மேற்கொள்ளும் செயற்பாடு (உபகரணம்) தர்க்கப்படலைகள் ஆகும். இங்கு பூலியன் தர்க்கம் பயன்படுத்தப்படுகின்றது.

    ஒரு தர்க்கப்படலையின் உள்ளீட்டை இன்னொரு தர்க்கப்படலையின் வெளியீடாக பயன்படுத்த முடியும். இவ்வாறு பல தர்க்கப்படலைகள் சேர்ந்த தொகுதி தர்க்கச் சுற்றுக்கள் (டுழபiஉ ஊசைஉரவைள) எனப்படும்.

    நிலைமாற்றிகள், கணனிகள் என்பனவற்றின் செயற்பாடுகள் தர்க்கப்படலையின் அடிப்படையில் இடம் பெறுகின்றன.

    நவீன அளவையியலாளர்களாகிய
    1. ஜோர்ஜ் பூல்  - 1815 - 1864
    2. டீ மோர்கன்  - 1806 - 1871

    ஆகியோரால் தர்க்கப்படலை விருத்திசெய்யப்பட்டது. ஜோர்ஜ் பூலினுடைய இயற்கணித விதிகள் , டீ மோர்கன் தேற்றங்கள் என்பன தர்க்கப்படலையின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

    ஒரு தர்க்கப்படலையில் உள்ளீட்டு சமிக்ஞை வழங்கப்பட்டு அது தர்க்கவியல் பணியை மேற்கொண்டு வெளியீட்டு சமிக்ஞையாக பெறப்படுகின்றது. தொடர்பாடலில் சமிக்ஞைகளை அனுப்புவதும் பெறுவதும் ஒரு மாற்றமுறுதல்  செயற்பாட்டின் ஊடாக நடைபெறுகின்றது. இச் செயற்பாட்டை நிறைவேற்றுவது தர்க்கப்படலைகள் ஆகும். இங்கு உயர் மின்னாற்றல், தாழ் மின்னாற்றல் என்பன முறையே 1 ஆகவும் 0 ஆகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. இவவை அளவையியலில் முறையே உண்மை (T), பொய் (F) எனக்கொள்ளப்படுகின்றது.

    சார்லஸ் டார்வின் "பரிணாமவியலாரின் தந்தை"

    “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்” ஆறு நாட்களில் கடவுள் மனிதனை படைத்தார் என்ற பைபிளின் கூற்றை நம்பியிருந்த இங்கிலாந்து தேசத்தில் மனிதன் குரங்கிலிருந்துதான் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற புரட்சிகரமான அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ஒருவரைத்தான் நாம் இன்று தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தத்தின் தந்தை எனப் போற்றப்படும் சார்லஸ் டார்வின். 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் இங்கிலாந்தின்  Shrews-bury என்ற நகரில் பிறந்தார் டார்வின். சிறு வயதிலேயே அன்னையை இழந்தார். அவரது தாத்தாவும் தந்தையும் மருத்துவர்களாக இருந்தவர்கள். அதனால் டார்வினையும் மருத்துவம் படிக்க எடின்பர்க் (University of Edinburgh) பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார் தந்தை.

    சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார். இயற்கையின்மீது அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு. மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடப்பதை பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார் அவர். தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை natural 'theology' அதாவது 'இறையியல்' பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று கேம்ஃப்ரிட்ஜ் (University of Cambridge) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின். 

    தமது 22-ஆவது வயதில் இறையியலில் பட்டம் பெற்றார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் துறையில் பேராசிரியராக இருந்த John Stevens Henslow என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின். அவர் மூலமாக கேப்டன் Robert FitzRoy என்பவரின் நட்பு கிட்டியது. தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் Robert FitzRoy-யின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரினாம வளர்ச்சி சித்தாந்தம் உருவாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது. அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22.

    ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல்  Brazil, Rio de Janiro, Mondivideo, Falkland Island, Galapagos Island, Hobart, Newzealand என உலகையே ஒரு வலம் வந்தது. பல இடரும், இன்னல்களும் நிறைந்ததாக அந்த பயணம் அமைந்தது. ஆனால் இயற்கையின் மீது இருந்த அளவிடமுடியாத ஈடுபாட்டால் டார்வினுக்கு அது பெரும் துன்பமாக படவில்லை. சென்ற இடத்தையெல்லாம் கூர்ந்து ஆராய்ந்த டார்வின் அதுவரை அறியப்படாத பல விநோதமான விலங்குகளின் எலும்புகளை சேகரித்தார். ஊர்வன, நடப்பன, பறப்பன என எல்லாவித உயிரினங்களையும் ஆராய்ந்தார். அவை இடத்துக்கு இடம் மாறுபட்டிருப்பதையும், சில ஒற்றுமைகளை கொண்டிருப்பதை கண்டு வியந்தார் டார்வின். உயிரினங்கள் அனைத்துமே பொதுவான மூதாதையர்களின் வழிதோன்றல்களாக இருக்குமா என்பதும் அவை தொடர்ச்சியாக சிறு சிறு மாற்றங்களைப் பெற்று தற்போதைய வளர்ச்சியை பெற்றிருக்கின்றனவா? என்பதுதான் டார்வினின் கேள்வியாக இருந்தது. 

    தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார். கெலபகஸ் (Galapagos Island) தீவுகளில் புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1836-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார் டார்வின். ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும், ஆய்வுகளையும் வைத்து அவர் The voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார். தமது 30-ஆவது வயதில்  Emma Wedgwood என்ற உறவுக்காரப் பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் டார்வின். திருமணத்திற்கு பின்பும் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். 

    புதிய உயிரினங்கள் உருவாகும் முறை, பின்னர் அவை தங்களின் மூலத்திலிருந்து முழுமையாக மாறி விடுவதன் காரணங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து 1859-ஆம் ஆண்டு உலகை வியப்பில் ஆழ்த்திய தனது புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். "The Origin of Species by Natural Selection" அதாவது 'இயற்கையில் உயிரினங்களின் தோற்றம்' என்ற அந்த புத்தகம் கூறிய சித்தாந்தம்தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தம். அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும் என்று கூறினார் டார்வின். அதை 'Natural Selection' என்றும் "survival of the fittest" என்றும் அவர் விளக்கினார். ஆனால் அந்த சித்தாந்தத்தின் விளைவை உலகம் அப்போது உணரவில்லை. செடிகொடிகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே அது பொருந்தும் என்றுதான் நம்பியது. டார்வின்கூட மனிதனைப் பற்றி புத்தகத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. 

    பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்த வேண்டும் என்பதை உலகம் உணரத் தொடங்கியபோது நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? என்ற கேள்வி எழுந்தது. டார்வின் அப்படி நேரடியாக சொன்னதில்லை நம்பியதுமில்லை. ஆனால் அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினர். எதிர்பார்க்கப்பட்டது போலவே தேவாலயங்களின் கண்டனத்துக்கு உள்ளானது டார்வினின் சித்தாந்தம். அவர் வாழ்ந்த போதே அவரது "The Origin of Species" என்ற நூல் உலகம் முழுவதும் பதிக்கப்பட்டது. கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 


    டார்வின் பரிணாம கோட்பாடு மூன்று அம்சங்களைக் கொண்டது.

    1. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது)

    2. மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குஎடுத்துச் செல்லும் ஆற்றல்)

    3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச்சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப் பெருக்க முறைகளை தீர்மானித்துஉயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது)

    இதைத்தான் இன்றைய நாகரீக, விஞ்ஞான உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் மகிமைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதை 'நவீன டார்வினியம்' என்கிறார்கள். இதன் விளக்கம் என்பது, ஜீவ போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து இனவிருத்தி செய்யும் (குணம்,உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது தான். "வலுவுள்ளது வாழ்கிறது, மெலிந்தது வீழ்கிறது" என்கிற இவரின் பரிணாம தத்துவத்தை சிலர் அவர் காலத்திலேயே கேலி செய்தார்கள்.


    "உலகை கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்". 

    மனுகுல மூதாதையரின் முகவரியை உலகிற்குக் காட்டிய முன்னோடி, அறிவு ஒளி 1882-ஆம் ஆண்டு ஏப்ரல்19-ஆம் தேதி அடங்கிப் போனார். இங்கிலாந்தில் 'விஞ்ஞானிகளின் கார்னர்' என்று சொல்லப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் எபியில் (Westminster Abbey) டார்வினின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது. 

    கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற பிரச்சனையில் அவர் எப்போதும் ஈடுபட்டதே இல்லை. அப்படி ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்றார். மனிதன் பிறப்பது வாழ்வதற்காக, அது தேவை! அவரின் கண்டுபிடிப்பான பரிணாம கோட்பாட்டிற்கும், மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும், ஏன் மதம் இதில் மூர்க்கமாகத் தலையிடுகிறது என்பதும் தான் அவரின் உரத்தக் கேள்வியாக இருந்தது.

    கடவுள் நம்பிக்கை மனிதனின் மனதில் இயற்கையாகத் தோன்றுவதில்லை. அது மனிதனின் அறிவு வளர வளர உண்டானது, இதை வேறு வகையில் சொல்வதென்றால் மனிதனின் வியப்பும், இரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும், கற்பனைத் திறனும் அதிகரிக்க அதிகரிக்க அவனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டானது என்றார்!.

    டார்வினின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு குரங்கிலிருந்துதான் நாம் தோன்றினோம் என்று நீங்கள் நம்பினாலும் சரி, இல்லை அது அபத்தமான கருத்து என்று புறம் தள்ளினாலும் சரி ஒன்றை மட்டும் நாம் மறுக்க முடியாது, வரலாற்றாலும் புறக்கணிக்க முடியாது. உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய மனுகுல அறிவை விருத்தி செய்ததில் டார்வின் என்ற தனி ஒரு மனிதன் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார் என்பதுதான் அந்த உண்மை!.

    காண்பனவற்றில் உண்மையைத் தேடும் ஆர்வம், புரியாதவற்றையும் அணுக்கமாக ஆராயும் பொறுமை, மத நம்பிக்கையின் ஆணி வேரையே அசைக்கும் என்றும் தெரிந்தும் தாம் உண்மை என்று நம்பியவற்றை அச்சமின்றியும், தயங்காமலும் உலகுக்கு சொன்ன துணிவு. இவைதான் டார்வின் என்ற மாமனிதனுக்கு வானம் வசப்பட்டதற்கான காரணங்கள். அவருக்கு இருந்த ஆர்வம், பொறுமை, துணிவு, தன்னம்பிக்கை ஆகிய பண்புகள் நமக்கு இருந்தால் நாம் விரும்பும் வானம் நிச்சயம் நமக்கும் தயங்காமல் வசப்படும்!.

    பெஞ்சமின் ஃபிராங்கிளின்

    ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெற்றாலே வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டதாக கருதுகிறோம். அப்படியென்றால் நான்கு வெவ்வேறு துறைகளில் வெற்றி பெற்ற ஒருவரின் சாதனையை எந்த அளவுகோல் வைத்து அளப்பது. வர்த்தகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்ற ஒருவரின் பெயரை அமெரிக்க வரலாறு பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்திருக்கிறது. அவர் இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர்.

    'Poor Richard's Almanack' என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவர். உலகின் மிகப்பிரபலமான சுயசரிதைகளுள் ஒன்று அவருடையது. மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், bifocal glasses எனப்படும் வெள்ளெழுத்தக் கண்ணாடியையும் மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர். அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, அரசதந்திரியாக, பிரான்ஸ்க்கான தூதராக விளங்கியவர். அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர். இப்படி பல பரிமாணங்களில் பிரகாசித்த அவரை அமெரிக்காவின் ஆகப் பிரபலமான குடிமகன் என்றும் அழைக்கிறது வரலாறு. அவர்தான் தான் வாழ்ந்த 84 ஆண்டுகளும் மனுகுலத்தின் மேன்மையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த விஞ்ஞானியும், இலக்கியவாதியும், வர்த்தகரும், அரசியல்வாதியுமான பெஞ்சமின் ஃபிராங்கிளின்.

    1706 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார் ஃபிராங்கிளின். மொத்தம் 17 பிள்ளைகளில் பத்தாவதாக பிறந்தவர் அவர். அவரது தந்தையார் சோப்புக் கடிக்களையும், மெழுகுவர்த்திகளையும் தாயரித்து பாஸ்டன் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்து விற்பனை செய்வார். பெரிய குடும்பம் என்பதால் அவர்கள் வீட்டில் வறுமை வசதியாக் ஆட்சி செய்தது. குடும்ப ஏழ்மையின் காரணமாக ஃபிராங்கிளினை பள்ளிக்கு அனுப்பகூட அவரிடம் பணம் இல்லை. ஃபிராங்கிளின் பள்ளி சென்றது ஓறாண்டுக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதுமட்டுமல்ல பள்ளிக்கு செல்லாவிட்டாலும் தன் தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் அவர் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

    வாசிப்பை நேசிப்போம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் நம்மில் பலர் புத்தகங்கள் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை. ஆனால் ஃபிராங்கிளினுக்கோ இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பது என்றால் கொள்ளைப் பிரியம். அந்த அவருடைய பண்புதான் பிற்காலத்தில் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதும் வீரியத்தை அவருக்கு தந்தது. புத்தகங்கள் வாசிப்பதில் இருந்த ஆர்வம் காரணமாகவே அவர் தனது சகோதரர் ஜேம்ஸின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் புழுவாக படித்துத் தீர்த்து ஆனந்தம் அடைவார். நிறைய வாசித்ததாலோ என்னவோ சுவாரசியமாக எழுதும் திறமையும் அவருக்கு இருந்தது.

    இங்கு ஒரு சுவாரசியமான நிகழ்வைக் குறிப்பிட வேண்டும். ஃபிராங்கிளின் பல கட்டுரைகளை தானே எழுதி பெயர் குறிப்பிடாமல் அதிகாலையில் அந்த அச்சுக்கூடத்தின் வாயிலில் வைத்து விடுவாராம். சகோதரரும், நண்பர்களும் அவற்றைப் பாராட்ட ஃபிராங்கிளின் மட்டும் அவை நன்றாக இல்லை அப்படி இருக்குமேயானால் எழுதியவர் பெயரைக் குறிப்பிட்டிருப்பார் என்று எதிர்த்துக் கூறுவாராம். தன் தம்பி சொல்வதற்கு எதிராகவே முடிவெடுக்கும் பழக்கமுடையவர் அண்ணன் என்பதால் அவற்றையெல்லாம் அழகாக அச்சிட்டு பிராங்கிளினைக் கொண்டே விற்பனை செய்ய சொல்வாராம் ஜேம்ஸ். எவ்வுளவு சாதுர்யம்? பிறகு தனது சகோதரருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி Philadelphia வந்தடைந்தார். அங்கும் அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கினார்.

    பத்திரிக்கைகளில் நிறைய எழுதினார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. 1720 ஆம் ஆண்டு Pennsylvania Gazette என்ற பத்திரிக்கையை விலைக்கு வாங்கி அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஃபிராங்கிளின். நான்கு ஆண்டுகள் கழித்து Poor Richard's Almanack என்ற சஞ்சிகையைத் தொடங்கினார். மிகவும் வித்தியாசமான பாணியில் வெளிவந்த அந்த சஞ்சிகைதான் அவருக்கு செல்வத்தையும், பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்த்தது. அச்சுத்துறையில் புதுமைகள் செய்த அதே வேளையில் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருந்தது. குறைவான எரி சாதனத்துடன் மிகுந்த வெப்பம் தரக்கூடிய அடுப்பை அவர் கண்டுபிடித்தார். அவற்றைத் தயாரித்து விற்கவும் தொடங்கினார். பயிர்களுக்கு செயற்கை உரமிட்டால் அவை செழிப்பாக வளரும் என்று எடுத்துக் கூறினார். ஆரம்பத்தில் புறக்கனிக்கப்பட்டாலும் அதிலிருந்த உண்மையை உலகம் மெதுவாக புரிந்து கொண்டது. இப்போதுகூட உலகம் முழுவதும் செயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது.

    மின்சாரத்தின் மீது ஆய்வுகள் செய்தவர் மின்னலில்கூட மின்சக்தி இருக்கிறது என்பதை கண்டறிந்தார். கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது அதேபோல் மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதைக் கண்டுபிடித்து மின்னல் இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். முதியர்வர்கள் எட்டப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அனியும் ஒரே கண்ணாடியான bifocal lens அவருடைய கண்டுபிடிப்புதான். தன் கண்டுபிடிப்புக்கெல்லாம் அவர் காப்புரிமை பெற்றதில்லை. மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது நமது கண்டுபிடிப்பால் பிறர் பயன்பெறுவதை நாம் பாக்கியமாக கருத வேண்டும் என்பதே அவரது எண்ணம். அறிவியல் துறையில் பெரிய பங்களிப்பைச் செய்த அவர் இன்னும் என்னவெல்லாம் உலகுக்கு தந்திருக்கிறார் தெரியுமா?

    நோட்டுப் பணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அதன் புழக்கத்தை அதிகரிக்கச் செய்தார். சப்ஸ்கிரிப்சன் (subscription) எனப்படும் சந்தா முறையில் நூல்களை வாங்கி படிக்கும் முறையை உலகுக்கு அறிமுகம் செய்தவரும் அவர்தான். Philadelphia-வின் தபால் துறையின் பல மாற்றங்களை செய்து தற்கால தபால் துறை பின்பற்றும் பல கொள்கைகளை உருவாக்கித் தந்தார். 1730-ஆம் ஆண்டு நடமாடும் நூல் நிலையம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் முதல் தீ காப்பீட்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார். ஒரு கல்விக் கழகத்தை நிறுவ வேண்டும் என்று அவர் கனவு கண்டார். அவரது காலகட்டத்திலேயே அந்தக் கனவு நனவானது. இன்று உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான  Pennsylvania பல்கலைக்கழகம் அவர் நிறுவியதுதான். 1749-ஆம் ஆண்டு அது நிறுவப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தார் ஃபிராங்கிளின்.

    ஃபிராங்கிளின் சிறந்த சிந்தனையாளர், நேர்மையானவர் என்பதால் அவரை பயன்படுத்திக்கொள்ள விரும்பியது அரசு. அவரும் சட்டமன்ற உறுப்பினர், அரசதந்திரி, தூதர் என பல்வேறு நிலைகளில் அரசியல் பணி புரிந்தார். இங்கிலாந்தின் காலனித்துவ ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த அமெரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர அவர் தன் ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி ஃபிரான்ஸின் உதவியைப் பெற்றார். அவர்மேல் பெரும் மதிப்புக் கொண்டிருந்த ஃபிரான்ஸும் அமெரிக்காவுக்கு உதவ முன்வரவே இங்கிலாந்து பணிந்தது அமெரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்தது. 1789 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டென் அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை பெஞ்சமின் ஃபிராங்கிளினை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைத்தார். அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது. 

    சுதந்திரம் அடைந்த பிறகு அமெரிக்கா முதன் முதலாக இரண்டு அஞ்சல் தலையை வெளியிட்டது. ஒன்றில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டெனின் படம். மற்றொன்றில் பெஞ்சமின் ஃபிராங்கிளினின் படம். அமெரிக்காவுக்கும், உலகுக்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த அந்த மாமனிதனுக்கு அந்த தபால் தலை மூலம் நன்றி தெரிவித்துக்கொண்டது அமெரிக்க தேசம். கடைசி நாள் வரை ஓய்வு என்பதையே அறியாமல் உழைத்த ஃபிராங்கிளின் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தனது 84 ஆவது வயதில் காலமானார். அப்போது உலக நாடுகள் துக்கத்தில் மூழ்கின. அரசாங்க மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுமார் இருபதாயிரம் பேர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். 

    பெஞ்சமின் ஃபிராங்கிளின் உதிர்த்த பல பொன்மொழிகளை இன்றும் பல பேச்சாளர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர். அவற்றுள் மிகவும் பிடித்த பொன்மொழி:

    "இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்; ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்" 

    ஆம் வரலாற்றில் மிகவும் பயனுள்ள அர்த்தமுள்ள வழியில் செலவழிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்கு சொந்தக்காரர் பெஞ்சமின் ஃபிராங்கிளின். அமெரிக்கர்கள் மட்டுமல்ல நாம் அனைவருமே ஒட்டுமொத்த முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய வரலாற்று மாந்தர் பெஞ்சமின் ஃபிராங்கிளின். அவரைப்போல தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முற்படும் எவருக்கும் எந்த வானமும் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மையாகும்.


    Read more: http://urssimbu.blogspot.com/2012/01/benjamin-franklin-historical-legends.html#ixzz2eBPoJnEI

    கலிலியோ கலிலி ('வானியல் சாஸ்திரத்தின் தந்தை')

    "உணர்வுகள், ஆறாம் அறிவு, பகுத்தறிவு ஆகியவற்றை மனிதனுக்குத் தந்த கடவுளே அவற்றை மனிதன் பயன்படுத்தக்கூடாது என்று சொல்கிறார் என்ற கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது". சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் உதிர்க்கப்பட்ட வசனம் இது. ஒன்பது கோள்களில் ஒன்றுதான் உலகம் என்பதும், நிலா பூமியை சுற்றுகிறது என்பதும், பூமி சூரியனை சுற்றுகிறது என்பதும் இன்று நாம் அறிந்த உண்மை. ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்புவரை பூமிதான் பிரபஞ்சத்தின் நடுநாயகம் என்றும், நிலாவும் சூரியனும் பூமியை சுற்றுகின்றன என்றும் உலகம் நம்பிக்கொண்டிருந்தது. அது பொய் சூரியனை சுற்றிதான் அனைத்தும் சுழல்கின்றன என்ற உண்மையை துணிந்து சொன்னதற்காக சொல்லனா துயரங்களை அனுபவித்த ஒருவரை பற்றிதான் நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் பிரபஞ்சத்தின் உண்மையான அமைப்பை முதன்முதலில் அறிந்து சொன்ன வானியல் நிபுனர் கலிலியோ கலிலி (Galileo Galilei). 


    1564-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் நாள் இத்தாலியில் Pisa-நகரில் பிறந்தார் கலிலி. ஆறு பிள்ளைகளில் மூத்தவர் அவர். அவரது குடும்பம் சமூகத்தில் உயரிய அந்தஸ்து பெற்ற குடும்பம் என்றாலும் பணக்கார குடும்பம் அல்ல. சிறுவயதிலேயே அறிவுக்கூர்மையும், ஆழமாக சிந்திக்கும் திறனும் பெற்றிருந்தார் கலிலி. அவருக்கு பதினேழு வயதானபோது பிசா (University of Pisa) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணிதமும், இயற்பியலும் கற்றார். அப்போது அந்த பல்கலைக்கழகத்தில் அவர்தான் அதிகமான கேள்விகள் கேட்ட மாணவராக இருந்திருப்பார். கற்பிக்கப்பட்ட அறிவியல் கருத்துகளை மற்ற மாணவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள, கலிலி மட்டும் அதற்கான ஆதாரங்களை கேட்பார். உதாரணத்திற்கு வெவ்வேறு எடையுடைய இரண்டு பொருட்களை உயரத்திலிருந்து கீழே போட்டால் அதிக எடையுடைய பொருள் முதலிலும், லேசான பொருள் பின்னரும் தரையில் விழும் என்று கற்பிக்கப்பட்டது. 

    அரிஸ்டாட்டில் கூறியிருந்த அந்த கருத்தை அப்படியே கற்பித்து வந்தன பல்கலைக்கழகங்கள் ஆனால் விஞ்ஞான கருத்து எதையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கபட்டிருக்க வேண்டும் என்று நம்பிய கலிலி அரிஸ்டாட்டிலின் கூற்றை மறுத்தார். அதனால் ஆசிரியர்களின் கண்டனத்திற்கு ஆளானார். பின்னர் பட்டம் பெற்ற பிறகு தமது 25-ஆவது வயதில் அதே பல்கலைக்கழகத்தில் கணித ஆசிரியராக சேர்ந்தார். மாணவனாக இருந்து செய்ய முடியாததை ஆசிரியராக இருந்து செய்வோம் என்று தீர்மானித்த அவர் அரிஸ்டாட்டிலின் கூற்றை பொய் என்று நிரூபிக்க விரும்பினார். நிறைய பார்வையாளர்களை அழைத்து பிசாவின் சாய்ந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று இருவேறு எடையுடைய இரண்டு உலோக குண்டுகளை ஒரே நேரத்தில் கீழே போட்டார். இரண்டு குண்டுகளும் ஒரே நேரத்தில் சமமாக தரையில் விழுந்தன. 
    ஓர் எளிய அறிவியல் உண்மையை கண்கூடாக கண்டபோதும் கூடியிருந்தவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? அதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்றும், இயற்கைக்கு மாறானது என்றும் கூறி நம்ப மறுத்தனர் கலிலியை மந்திரக்காரன் என்று மறுதலித்தனர். அதன்பிறகு கலிலியோவால் பிசா பல்கலைகழகத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை.  University of Padua பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக சேர்ந்தார். வானியல் ஆய்வில் அதிகம் ஆர்வம் கொண்ட கலிலி 1609-ஆம் ஆண்டில் telescope எனப்படும் உலகின் முதல் தொலைநோக்கியை உருவாக்கினார் அதைக்கொண்டு தினமும் விண்வெளியை ஆய்வு செய்தார். அதன்பலனாக விண்வெளியில் அதிசயிதக்க பல கண்டுபிடிப்புகளை செய்தார். முதலில் சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையத்தை கண்டுபிடித்தார். பின்னர் வியாழன் கோளுக்கு நான்கு துணைக்கோள்கள் அதாவது நான்கு நிலாக்கள் இருக்கின்றன என்பதை கண்டுபிடித்து சொன்னார். 

    சூரியனில் கரும்புள்ளிகள் தெரிவதையும் அவர் கண்டார். அந்தப்புள்ளிகள் என்னவாக இருக்கும் என்று சிந்தித்தபோது அவை சூரியனை சுற்றும் கிரகங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்தார். சூரியனை சுற்றியே அனைத்தும் சுழல்கின்றன என்ற தனது கருத்தை அதன்மூலம்தான் உறுதி செய்தார் கலிலி. ஏற்கனவே Copernicus அறிந்து சொன்ன கருத்துதான் அது என்றாலும் அதற்கான ஆதாரத்தை கண்டு சொன்னவர் கலிலிதான். அந்தக்கருத்தை சிலர் ஏற்றாலும், கேள்வி கேட்பதே தவறு என்று வாழ்ந்த பழமைவாதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அது பைபிள் கருத்துக்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவ சமூகமும் கலிலியோவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. கலிலி கடவுளை மறுப்பவர் என்றும், சூனியக்காரர் என்றும்கூட பட்டம் கட்டியது ரோமன் கத்தோலிக்க தேவாலயம்.  

    அந்தக்காலகட்டத்தில் சர்வ வல்லமை பெற்றிருந்தன தேவாலாயங்கள். நாட்டை அரசன் ஆண்டாலும் அந்த அரசனையும் ஆளும் வல்லமை தேவாலாயங்களுக்கு இருந்தன. 1615-ஆம் ஆண்டில் கலிலியோ தமது கண்டுபிடிப்புகளையும், சூரியன்தான் பிரபஞ்சத்தின் நடுநாயகம் என்ற கருத்தையும் ஒரு புத்தமாக வெளியிட்டார். புனித தேவாலாயத்திற்கு எதிராக செயல்பட்டார் என்றுகூறி கலிலியோவை கைது செய்தனர் தேவாலாய அதிகாரிகள். தன்னுடைய கருத்துகள் தவறானவை என்று ஒப்புக்கொள்ளும்படி கலிலி வற்புறுத்தப்பட்டார் தன் உயிருக்கே ஆபத்து என்று உணர்ந்த கலிலி வேறு வழியில்லாமல் தன் கூற்று தவறு என்று உதட்டளவில் ஒப்புக்கொண்டார். பின்னர் பிரான்ஸுக்கு குடிபெயர்ந்த கலிலி தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஆண்டு செல்ல செல்ல பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்ற கருத்தில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது.

    ப்ளோரன்ஸ் (Florence) நகர அதிகாரிகளின் அனுமதியோடு 1632-ஆம் ஆண்டில் அவர் மற்றொரு புத்தகத்தை வெளியிட்டார். மீண்டும் தேவாலயத்தை அவமதிக்கிறார் என்றுகூறி ரோம் நகர உயரதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்தனர் இம்முறை விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அவரை வீட்டுக்காவலில் வைத்தனர் அப்போது அவருக்கு வயது 68. பத்து ஆண்டுகள் வீட்டுக்காவலிலேயே காலம் கழித்த கலிலி 1642-ஆம் ஆண்டு தமது 78-ஆவது அகவையில் காலமானார். அவர் இறந்த பிறகு அவரது ஆராய்ச்சிகளையும், கண்டறிந்த உண்மைகளையும் உள்ளடக்கிய புத்தகம் ஐரோப்பா முழுவது வலம் வந்து பழமைவாதத்தில் சிக்காத சிலரின் அறிவுக்கண்ணை திறந்தது. கண்கூடாக காணும் வரை அல்லது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கபடும் வரை எதையுமே ஏற்றுக்கொள்ளாத மனோபாவம்தான் உலகம் வியக்கும் கண்டுபிடிப்புகளை செய்ய கலிலிக்கு உதவியிருக்கிறது. 'வானியல் சாஸ்திரத்தின் தந்தை' என்ற பெயரையும் அவருக்கு பெற்றுத்தந்திருக்கிறது. 

    உண்மை என்று நம்ப படுபவைகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்  என்ற அவசியம் கிடையாது. சந்தேகம் இருந்தாலும் துணிந்து கேட்கலாம் அது பொய் என்று தெரிந்தாலும் தைரியமாக சொல்லலாம். கலிலியோ போல் கேள்வி கேட்க துணிபவர்களுக்கும், புதிய உண்மைகளை கண்டுபிடிக்க முனைவர்களுக்கும் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைப்பவருக்கும் நிச்சயம் அந்த வானம் வசப்படும்.


    Read more: http://urssimbu.blogspot.com/2013/02/galileo-galilei-historical-legends.html#ixzz2eBTpZyg3
     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info