Headlines News :

    பார்வையாளர்கள்

    Showing posts with label கட்டுரை. Show all posts
    Showing posts with label கட்டுரை. Show all posts

    மீன்மழை பெய்வதற்கான காரணம்

    மழைகாலங்களில் சில பகுதிகளில் மீன்மழை பெய்வது பற்றி அறிந்திருப்பார்கள். ஆனால் அது எவ்வாறு நிகழ்கின்றது என்பது பற்றி அனேகமானோர் அறிந்திருக்கமாட்டார்கள். இலங்கையிலும் கூட சில பகுதிகளில் மீன்மழை கடந்த காலங்களில் இடம்பெற்றது.

    மாகாண சபைகட்கான காணி அதிகாரங்கள் பற்றிய உயர்நீதி மன்றின் அண்மைய தீர்ப்பு ஒரு பார்வை


    “இன்றைய இலங்கையன் அரசியலை பொறுத்த மட்டில் காணி சம்மந்தமான அதிகார வேட்கை வெறும் நிலத்திற்கான அடிப்படையல்ல. அது குறிப்பாக வடமாகாணத்தை பொறுத்த மட்டில் திட்டமிடப்பட்ட குடித்தொகை விகிதார மாற்றத்திற்கான அடித்தளம் என்பது தான் உண்மை“


    அ.அர்ஜின்,
    சட்ட பீடம்,
    யாழ் பல்கலைக்கழகம்.
    arjunwil@yahoo.com


    இந்த பந்தியை எழுத ஏற்பட்ட நிர்ப்பந்தத்தின் காரணம் சென்ற வியாழன்
    அதாவது 26-09-2013 அன்று இலங்கையின் உயர் நீதிமன்றம் வழங்கிய வழக்கின் தீர்ப்புத்தான். இதில் குறிப்பாக இலங்கை ஒற்றை ஆட்சி நாடு என்கின்ற படியால் காணி அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் மட்டுமே காணப்படும் எனவும் மிக வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டும் அது மாகாண சபையின் ஆளுகைக்கு உட்படும் எனவும் இத்தீர்ப்பு எடுத்தியம்புகின்றது. இத்தீர்ப்பு மூவரங்கிய நீதிபதிகளால் ஏகமனதாக ஆனால் வேறுபட்ட மேற்கோள்களுடன் வழங்கியுள்ளது. அவ்வமர்வு பிரதம நீதியரசர் மொகான் பீரீஸ் மற்றும் நீதியரசர்கள் சிறீ பவன் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோரை உள்ளடக்கி காணப்பட்டது.

    நீதியரசர் சிறி பவன் தனது தீர்ப்பில் பதின்மூன்றாம் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளவாறாக தேசிய காணி ஆணைக்குழு மூலம் மாகாணங்கட்கான காணி முறைமைகள் அங்கீகரிக்கப்டும் வரை முழுமையாக இவ்வதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கும் என தெரிவித்ததோடு மேலதிகமாக மத்திய அரசு ஏதேனும் தேவைகட்காக மாகாண சபையிடம் காணிகளை கையளித்திருப்பினும் அதன் உண்மை உரித்து மத்திய அரசிடமே தொடர்ந்து காணப்படும் என தெரிவித்தார்.

    பிரதம நீதியரசர் குறிப்பிடுகையில் பதின்மூன்றாம் திருத்தம் இரண்டு வகையாக காணிகளை பிரித்துள்ளதோடு அதில் இரண்டாம் நிரலாக ஒதுக்கிய நிரலில் மட்டும் உள்ளடக்கப்பட்டுள்ள விடயமான அரச காணிகள் மத்திய அரசிற்கே என்றும் உரித்துடையவை என தீர்த்தார். இங்கு உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விடயம் அரச காணி என்பதன் வரைவிலக்கணம் அது தனியார் காணி தவிர்ந்த அனைத்து காணிகளும் அரச காணிகள் என வரையறை செய்கின்றது. எனவே தனியார் காணிகள் தனியாரிடமும் அரச காணிகள் முழுவதும் மத்திய அரசிடமும் காணப்பட்டால் மாகாண சபைக்கு எந்த வித காணி அதிகாரமும் கிடையாது என்பது வெளிப்படை.

    இன்றைய வடமாகாண சபையின் நோக்கமும் என்றைக்குமே தமிழ் மக்களின் ஏக்கமும் தமது தாயக பகுதிகளில் இன விகிதாசாரம் மாற்றப்பட்டு தாம் ஏதிலிகளாக மாற்றப்பட்டு விடக்கூடாது என்பதேயாகும். இத்தீர்பானது அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கட்கு அரசியற் தளத்தில் ஓர் சட்டவலிதார்ந்த தன்மையை வழங்குவது முகத்தளவிலேயே தெளிவானது.

    ஆனாலும் சட்டத்தளத்தை பொறுத்த வரை இது மிகச்சரியான ஓர் முடிவு என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன். ஏனெனில் இலங்கையில் யாப்பே மீயுயர்வாக சட்டம். அதன் உறுப்புரை 33(ஈ) காணிகளை வழங்குவது அல்லது பகிர்ந்தளிப்பது தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதிக்கு மட்டுமே வழங்குகின்றது. அதோடு இலங்கையில் யாப்பை பொருள்கோடல் செய்யவும் இறுதி தீர்மானம் எடுக்கவும் அரசியலமைப்பின் உறுப்புரை 118 உயர்நீதி மன்றிற்கே அதிகாரம் அளிக்கின்றது. எனவே யாப்பில் அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கமைய ஓர் முடிவை நீதிமன்றுகள் எடுப்பதை சட்டவழு என்ற ரீதியில் யாரும் பார்க்க முடியாது.

    ஆனால் இத்தீர்பின் பொருள்கோடல் அர்த்தம்  வேற்று முறைமையில் ஆபத்துக்குட்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வழக்கில் சட்டமா அதிபர் சார்பாக தோன்றிய சட்டத்தரணி கொமின் தயாசிறி இன் கூற்றை அப்படியே மீள் பிரசுரம் செய்கின்றேன்.

    “This is very significant because it means that every citizen of the country has a right to every inch of land, and it does not belong to the chief minister of the provincial Council. Land is deemed to be in the hands of the president.”

    அதாவது இலங்கையின் காணி அதிகாரங்கள் மாகாண முதல்வர்கட்கு என்றுமே உரித்தான மாட்டாது. அது இலங்கை ஜனாதிபதியின் மேல் இலங்கை மக்கள் அனைவருக்கும், எந்த பிரதேசத்திலும் சம உரிமையை கொண்டதாக காணப்பட வேண்டும்.

    அவ்வாறெனில் கொழும்பில் இருந்து தமிழர்கள் ஏன் வடகிழக்கிற்கு விரட்டப்பட்டனர். அப்போதும் இதே அரசியலமைப்பின் உறுப்புரை 14 (h) அதாவது அடிப்படை உரிமைகள் எனும் பகுதியினுள் வரும் “இலங்கையினுள் சுகந்திரமாக எங்கும் வாழும் உரிமை” அன்று மறுக்கப்பட்ட போது நீதித்துறை செய்தது என்ன ?

    எனவே இன்று மாகாண சபைகளின் முன்னால் உள்ள சவால் சட்டத்தளத்தினுள் நின்று கொண்டு நீதியரசர் குறிப்பிட்ட அந்த வரையறுக்கப்பட்ட நிலைமைகளை எவ்வளவு துாரம் நீட்சியடையச் செய்ய முடியும் என்பதாகும்.  

    சட்ட  சகபாடிகட்காக
    இவ்வழக்கின் பெயர் Solaimuthu Rasu V Competent Authority of the plantation Ministry. இப்போது உயர்நீதி மன்று வழங்கிய இத்தீர்பானது முன்னைய தீர்ப்பான Jhon Keels வழக்கை புறத்தொதுக்கியுள்ளது. அந்த வழக்கு மாகாண சபைகட்கு காணி அதிகாரங்கள் உண்டு என தீர்த்த வழக்காகும். இப்போதைய வழக்கானது  அடிப்படையில் கண்டி மாகாண மேல் நீதிமன்றில் வழங்காணைக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்காகும். மேல் நீதிமன்று காணி அதிகாரங்கள் மாகாண சபைக்கு கிடையாது என தீர்க்க மேன்முறையீட்டில் மேன்மறையீட்டு நீதிமன்று மாகாண சபைகட்கு காணி அதிகாரம் உண்டு என தீர்த்தது. ஆகால் இறுதி முறையீட்டின் போது உயர்நீதிமன்று காணி அதிகாரங்கள் மாகாண சபைகளிற்கு இல்லை என தீர்த்த போதிலும் இது மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வே எனவே இறுதியான முன் பிணிக்கும் தீர்ப்பாக கருதாது அதற்கான முழு அமர்வு இடம் பெற வேண்டியது அவசியமாகும்.

    பிற்குறிப்பு
    இவ்வழக்கின் பிரதி கையிற்கு கிட்டாத காரணத்தால் முழுமையாக சட்ட உறுப்புரைகளையும் மேற்கோளிட்ட வழக்குகளையும் அலச இயலவில்லை.

    பாகிஸ்தான் புதிய தீவின் தோற்றத்திற்கான காரணம்

    பாகிஸ்தானில் கடந்த 24 .09.2013 அன்று 7.7 றிச்டர் அளவுத்திட்டத்தில் ஒரு புவிநடுக்கம் தென்மத்திய பாகிஸ்தான் பகுதியில் ஏற்பட்டிருந்தது. இந்தப் புவிநடுக்கத்தினால் பாகிஸ்தானில் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது ஒருபுறமிருக்க பாகிஸ்தான் கடற்பகுதியில் புதிதாக ஒரு தீவு தோற்றம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் புதிய  தீவின் தோற்றம் பற்றி இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது.

    அன்பின் உருவம் அன்னை தெரெசாவின் 16வது நினைவு தினம்

    அன்பின் உருவம் அன்னை தெரெசாவின் 16வது நினைவு தினம்"கண்ணால் பார்க்கக் கூடிய சக மனிதர் மீதே எம்மால் அன்பு செலுத்த முடியவில்லை என்றால் கண்ணுக்குப் புலப்படாத இறைவன் மேல் எங்ஙனம் அன்பு செலுத்துவோம்?" 

    இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரரான அன்னை தெரெசாவின் 16வது நினைவு தினம் இன்று. 

    அன்புக்கு உருவம் இருந்தால் அது இப்படித்தான் இருக்கும் என்று உலகத்தார் போற்றும் படி, அன்பை மட்டுமே தன் வாழ்வின் இலட்சியமாய், ஆதாரமாய் கொண்டு, மனிதனால் இப்படியும் வாழ முடியும் என்று உலகிற்கு உணர்த்தியவர் அன்னை தெரேசா 

    குட்டையான உருவம், முகத்தில் சுருக்கம், எப்போதும் நீலக் கோடுகளைக் கொண்ட தூய்மையான வெள்ளையாடை, முகத்தில் எப்போதும் புன்னகை இவற்றை தாங்கியபடி உலக மக்களின் இதயத்தில் அன்னையாய் நீங்கா இடம் பிடித்தவர் தெரேசா. 

    இந்த மகத்துவம்மிக்க மனிதநேயம் மரணித்து (05.09.997) இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்ற போதும், இன்னும் உலகத்தார் நினைவில் நீங்காது தன்நிகரற்ற பெண்மணியான வாழ்ந்து வருகிறார். 

    1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் திகதி அல்பேனியா நாட்டின் ஸ்கோப்ஜே என்ற குக்கிராமத்தில் பொஜாஸியு டிரேன், நிக்கோலா தம்பதியினருக்கு கடைசி வாரிசாக அவதரித்தவர் தெரேசா. 

    ஞானஸ்நானத்தின் வழியே ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற இனிய நாமத்தை சூடிக் கொண்டார். 

    தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்து பல்வேறு சோகங்களையும் சந்தித்தார் அன்னை. 

    இறைபக்தியிலும் சமூக சேவையிலும் நாட்டம் கொண்ட தன் தாயின் வழியில் சிறு வயது முதலே அன்னையின் மனமும் சென்றது. 

    தனது பங்கு ஆலயத்தில் பல புனிதர்களின் தியாகம்மிக்க வரலாறுகளை படித்தறிந்ததன் மூலம் அதன் வழியே மக்களுக்கு சேவைகள் புரிவது குறித்து உணர்ந்து கொண்டார். 

    சிறு வயதிலேயே அருட் சகோதரியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாக பதியவைத்தார் அன்னை, அதன்படியே 1928 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பதினெட்டாவது வயதில் தனது தாய் மற்றும் பங்குத் தந்தையின் ஆசியுடன் துறவறப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து அயர்லாந்தில் உள்ள லொரேடோ புனித கன்னிமரியாள் சபையில் சேர்ந்து பணியாற்ற தீர்மானித்தார். 

    இச்சபையின் துறவிகளை "பிரசங்க கன்னியர்´ என அழைப்பர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா சென்று பணியாற்றும்படி இவருக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

    ஆகவே 1929ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி பாரத தேசத்தின் கல்கத்தா நோக்கி பயணமானார். இது தான் அவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்த விடயமும் கூட. 

    அங்கு சென்ற இவர் தனது துறவற மடத்தின் வேண்டுகோளின்படி இறையியல் படிப்பையும், ஆசிரியர் பயிற்சியையும் மேற்கொண்டார். 

    அதே ஆண்டு மே மாதம் 23ம் திகதி தனது "அர்ப்பண உறுதி´ வார்த்தைப்பாட்டின் போது அக்னஸ், புனித குழந்தை திரேசாவின் கன்னிமை வாழ்வின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை திரேசா எனத் மாற்றிக் கொண்டார். 

    அத்துடன் கல்கத்தாவில் புனித மரியாள் பெண்கள் பாடசாலையில் சில காலம் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றினார். 

    1931 ஆம் ஆண்டு மார்ச் 24ம் திகதி அருட் சகோதரியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 1937 ஆம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி இறுதி அர்ப்பண உறுதி வார்த்தைப்பாட்டினை வழங்கினார். 

    அன்னையவர்கள் 1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் 10ம் திகதி தனது வருடாந்த ஞான ஒடுக்கத்திற்காக டார்ஜிங் சென்று திரும்புகையில் அவருக்கான இறையழைத்தல் வேறாக இருப்பதை உணர்ந்தார். 

    ஏற்கனவே ஏழைகள், கைவிடப்பட்டோர், அநாதைகள் குறித்த சிந்தனைகளில் நெருடப்பட்டிருந்த அவர் மனம் ஏழைகளுக்காகவும், கைவிடப்பட்ட நிலையில் வாழும் அநாதைகளுக்காகவும் குஷ்டரோகிகளுக்காகவும் ஒரு துறவற சபையை உருவாக்கும் சிந்தனைக்குள் ஆட்பட்டது. 

    ஆகவே தனது ஆன்ம குருவாகிய வான்எக்சம் அடிகளிடம் தனது எண்ணத்தை தெரிவித்து அவரின் நல்லாசியுடன் ஆயரின் அனுமதியையும் பெற்றார். 

    அதன் பிரதிபலன் 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் திகதி லொரேடோ சபையிலிருந்து வெளியேறி இந்திய கலாசாரத்திற்குள் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் விதத்தில் நீலநிறக் கோடுகளைக் கொண்ட வெள்ளை நிறச் சேலையை தூய்மையின் சின்னமாக தேர்ந்து கொண்டார். 

    தொடர்ந்து மூன்று மாதம் மருத்துவ படிப்பினையை மேற்கொண்ட இவர் அதே வருடம் டிசெம்பர் 21 ஆம் திகதி முதல் பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர், யாருமற்ற அநாதைகள், காசநோய் மற்றும் குஷ்டரோகங்களால் அவதிப்பட்டோரை நாடிச் செல்லலானார். அவர்களுக்கு தஞ்சமளிக்கும் தாயானார். 

    எந்தவொரு பணியிலும் ஏமாற்றங்கள் தாக்கங்கள் ஏற்படுவது இயல்பே. இதற்கு அன்னையும் விதிவிலக்கல்ல. அன்னையின் இந்தப் பயணத்திலும் அவர் பல்வேறு சவால்களை சந்திக்கலானார். 

    யாவற்றையும் கருணையே வடிவான தனது புன்னகையால் வெற்றியும் கொண்டார். ஒருமுறை அன்னையவர் தனது அன்பு உறவுகளுக்காக உதவி கேட்டு ஒரு வர்த்தகரிடம் கையேந்தினார். ஆனால் அந்த வர்த்தகரோ அன்னையின் நோக்கத்தை உணராது அக்கரத்தின் மீது எச்சிலை உமிழ்ந்தார். 

    உடனே அன்னையவர் அக்கரத்தை மடித்தபடி மறுகரத்தை நீட்டி எனக்குரியதை தந்து விட்டீர்கள். இனி அவர்களுக்காக உங்களால் முடிந்ததை தாருங்கள் என்றார். 

    அன்னையின் செயலினால் மனம் நெகிழ்ந்து போன அந்த வர்த்தகர் தேவையான உதவியை வாரி வழங்கியதோடு, அந்த உதவிகளை அவர் தொடர்ந்தும் வழங்கியதாக தெரியவருகிறது. 

    இவ்வாறு அன்னையின் செயல்களால் ஈர்க்கப்பட்ட பலர் அவர் வழியில் பயணிக்க முன்வந்தனர். 

    அவரின் இப்பணிகளை அவதானித்து வந்த கல்கத்தா மறை மாவட்ட திருச்சபை அன்னை உருவாக்கிய அன்பின் துறவற சபையை அங்கீகரித்தது. 

    1954 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி அச்சபையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். அத்துடன் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது சபை கன்னியர்களை நாட்டின் பல பகுதிகளுக்கும் பணியாற்ற அனுப்பி வைத்தார். 

    1965 ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் இச்சபைக்கு தனது அங்கீகாரத்தை வழங்கினார். 

    வெனிசுலா, உரோம், தன்சானியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இத்துறவற சபை வேர்விடத் தொடங்கியது. 

    அந்நாடுகளில் வாழும் ஏராளமான கன்னியர் இச்சபையினூடாக துறவறப் பணிக்குள் இணைந்து சேவையாற்ற முன்வந்தனர். 

    மேலும் சபையின் உயர் நோக்கத்தை அறிந்த பெரும் செல்வந்தர்கள், அமைப்புகள், அரச மட்டத்திலான தூதரகங்கள் உதவிகளை வாரி வழங்கத் தொடங்கினர். 

    மேலும் அன்னை அருட் தந்தையர், அருட் சகோதரர்கள், தனது மாணவர்களினதும் வறிய மக்களினதும் ஆன்மிக நலன் மற்றும் சேவைகளை கருத்திற் கொண்டு Missionaries of charity brothers, Contemplative branch of the sisters, Contemplative brothers The Missonaries of charity fathers, Day Missionaries of charity போன்ற பெயர்களில் பல அமைப்புகளை உருவாக்கினார். 

    அத்துடன் பல அருட் தந்தையர்களின் வேண்டுகோளுக்கிணங்க இயேசுவின் திருவுடல், திரு இரத்த இயக்கத்தையும் ஆரம்பித்தார். 

    இச்சபைகள் 1980 - 1990 காலப் பகுதியில் சோவியத் யூனியன், அல்பேனியா, கியூபா உள்ளடங்கலாக கொம்யூனிச நாடுகளிலும் ஸ்தாபிக்கப்பட்டது. 

    இவற்றினூடாக உலகின் பார்வை அவரின்பால் திரும்பியது. 1962 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது, 1979 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருது, 1996 ஆம் ஆண்டு அமெரிக்கா கௌரவ பிரஜை உரிமை என பல்வேறு விருதுகளும் அனைனையை நாடிவந்தன. 

    அன்பின் வடிவமாய் திகழ்ந்த அன்னை திரேசா 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ம் திகதி இறைபாதமடைந்தார். 

    அவர் இவ்வுலகை விட்டுப் பிரியும் போது அவரின் வழியில் சராசரியாக 5000 அருட் சகோதரிகள் பணியாற்றினர். அத்துடன் உலகின் 123 நாடுகளில் அன்பின் துறவற சபை 713 கிளைகளைக் கொண்டிருந்தது. 

    அன்னை திரேசா காலமாகிய பின் அவரில் விசுவாசங் கொண்டு கடும் புற்றுநோயினால் அவதிப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோனிகா பேஸ்ரா என்ற மாது அன்னையிடம் தனது புற்றுநோய் சுகமாக தினமும் மன்றாடிவந்தார். 

    அதன்படியே அவர் பரிபூரணமாக குணமடைந்தமை நிரூபிக்கப்பட்டது. அத்துடன் மேலும் பல புதுமைகள் நிகழ்ந்தமையை காலஞ் சென்ற திருத்தந்தை 23 ஆம் அருளப்பர் சின்னப்பர் ஏற்றுக் கொண்டதுடன், அவர் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பினை ஏற்ற 25 வருட நிறைவு வெள்ளிவிழா திருப்பலியின் போது பல்லாயிரம் மக்கள் வத்திக்கானில் ஒன்று திரண்டிருக்க அன்னையை முத்திப் பேறுபெற்ற (அருளாளர்) திரேசா என பகிரங்கப்படுத்தினார். 

    இதேவேளை, 1999-ல், அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இருபதாம் நூற்றாண்டின் அதிகமாகப் புகழப்பட்ட பெண்மணி என கணிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. 


     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info