Headlines News :

    பார்வையாளர்கள்

    Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts
    Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts

    புலித்தலைவர்களை தேடி கிழக்கிலும் சுவரொட்டிகள்


    புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபி எனப்படும் கசியன் மற்றும் நவநீதன் எனப்படும் அப்பன் ஆகிய இருவரும் தேடப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்தின் பட்டிதொட்டி எங்கும் பரவலான துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
    மேற்குறிப்பிட்ட இரு நபர்களின் புகைப்படங்களும் பிரசுரத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பிடப்பட்ட இரு நபர்களும் அதிகளவிலான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் இவர்களைப் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் சன்மானம் பெற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    தகவல் அறிந்தவர்கள் 0766911617 அல்லது 0113135680 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அறியத் தாருங்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிழக்கில் யுத்தம் நடைபெற்றபோது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சகல கிராமங்களிலும் காடு மேடுகளிலும் இந்தப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    Source

    வடக்கில் கடமையாற்ற 45 தமிழ் பெண் சிப்பாய்கள் தயார்!



    45 தமிழ் யுவதிகள் புதிதாக இராணுவ பயிற்சிகளை நிறைவு செய்து கடந்த புதன்கிழமை வெளியில் வந்து உள்ளனர்.
    இவர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். பின் 03 மாத கால பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.
    இவர்களோடு சேர்த்து 10 சிங்கள யுவதிகளும் இராணுவத்தில் சேர்க்கப்பட்டு ஒன்றாக பயிற்சிகள் வழங்கப்படடனர்.
    இராணுவத்தின் வரலாற்றில் தமிழ் யுவதிகளுக்கும், சிங்கள யுவதிகளுக்கும் ஒன்றாக பயிற்சிகள் வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது ஆகும். மட்டும் அன்றி தேசிய நல்லிணக்கம், சமூக ஒருமைப்பாடு, சமாதான முன்னெடுப்பு ஆகியவற்றுக்கும் இது ஆக்கபூர்வ முயற்சியாக அமைந்தது.
    இராணுவ பயிற்சிகள் மாத்திரம் அன்றி அழகியல் கலை, பூ அலங்காரம், மணப் பெண் அலங்காரம் போன்றனவும் கற்பித்துக் கொடுக்கப்பட்டு உள்ளன.
    இவர்கள் மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு, வன்னி, கண்டி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
    இராணுவத்தின் வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வொனிபேஸ் பெரேரா இவ்வணியை பாராட்டிக் கௌரவித்தார்.
    இவ்வணியில் தலை சிறந்த சாதனை வீராங்கனையாக திவ்யா தர்மநாயகன் தெரிவாகி உள்ளார்.
    இவ்வணியை சேர்ந்த தமிழ் யுவதிகள் வட மாகாணத்தில் கடமைக்கு அனுப்பப்பட உள்ளார்கள்.

    காதலியின் நிர்வாண படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட யாழ்ப்பாண காதலன்

    காதலியின் நிர்வாண படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட யாழ்ப்பாண காதலன்

    யாழ்ப்பாணத்தில் தனது காதலியுடன் உல்லாசமாக இருந்த ஆபாசப் படங்களை சமுக இணையத்தளமான பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.
    குறித்த நபர் தனது காதலியின் ஆபாசப் படங்களையே பேஸ் புக்கில் வெளியிட்டுள்ளார்.
    இது தொடர்பாக குறித்த யுவதியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த யாழ் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    மக்கள் அவலக்குரல், கமரன் அலட்சியம், ஊடகங்கள் வியாபாரம்

    cam-meets-tamilsபிரித்தானிய பிரதமர் டேவிட் கமரனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது இலங்கை அரச உளவுப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறு பதாகைகளுடன் நடந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது இலங்கை பாசிச அரசின் உளவுப்படைகள் தாக்குதல் நடத்தின. பின்னதாக டேவிட் கமரன் பயணம் செய்த வாகனத் தொடரணியை மக்கள் சூழ்ந்துகொண்டு அவலக் குரலில் கண்ணீர்வடித்தனர். இத்தகவலை பிரித்தானியப் பத்திரிகைகள் அனைத்தும் பதிவு செய்துள்ளன. இவை அனைத்தையும் பார்த்தபின்னர் டேவிட் கமரன், “பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது, சண்டை முடிந்து விட்டது, போர் நிறைவடைந்து ஆக நாடு வெற்றிப்பாதையில் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. நாட்டை ஒற்றுமைப்படுத்த இலங்கை அரசு பெருந்தன்மையுடன் செயற்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார். மனிதர்கள் சாரிசாரியாகப் புதைக்கப்பட்ட மண்ணிலிருந்து தனது பல்தேசிய வியாபாரிகளோடு இலங்கை அரசு பெருந்தன்மையோடு நாட்டை ஒற்றுமைப்படுத்துவது குறித்துப் பேசும் கமரனின் செய்திகளை எமது தமிழ் ஊடகங்கள் மக்களிடமிருந்து மறைத்துள்ளன. போலி நம்பிக்கைகளை மக்களுக்கு வழங்கி அவர்களைப் போராடவிடாமல் தடுத்து ராஜபக்ச உட்பட அதிகாரவர்க்கத்திற்குச் சேவை செய்யும் ‘தமிழ் இனவாதிகள்’ ஆபத்தானவர்கள். தமிழ் தலைமைகள் டேவிட் கமரன் தங்கத்தட்டில் தமிழீழம் பெற்றுத்தருவார் என்ற பாணியில் தமது வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டன.


    காணி, பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவோம்: விக்னேஸ்வரன்


    -எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா  


    '13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபையின் அதிகாரங்களின் கீழுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்துவோம்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    'எமது மாகாண சபைகளுக்கு மத்திய அரசாங்கம் அனுசரணையாக இயங்க வேண்டுமே தவிர மத்திய அரசாங்கத்திற்கு தோள்கொடுக்க மாகாண சபைகள் முன்வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது அதிகாரப்பரவலின் தார்ப்பரியத்தினை மத்திய அரசாங்கம் அறிய முற்படவில்லை என்ற கருத்தையே வெளிப்படுத்தும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    யாழ். ரில்கோ ஹோட்டலில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற வடமாகாண சபை உறுப்பினர்களிற்கான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

    இங்கு தொடர்ந்தும் உரையாற்றி அவர்,

    'மத்திய அரசாங்கம், மாகாண சபைகள், பிரதேச சபைகள் ஆகியன மக்களின் நலன்பேண உருவாக்கப்பட்டதுடன், மக்களின் ஆணையை நிறைவேற்றுவதே இவற்றின் கடமையாகும். 

    1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய உடன்படிக்கையின் போது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மேற்படி சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

    ஆனால் அன்றைய ஜனாதிபதி தமிழ் பேசும் மக்களிற்கு எந்தவிதமான சலுகைகளையும் தான் கொடுக்கவில்லை என சிங்கள மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதத்திலான மாகாண சபைகளை சகல மாகாணங்களுக்கும்  அறிமுகம் செய்தார்.

    வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சேர்ந்தே ஒரு மாகாண சபை ஒதுக்கப்பட்டதுடன், தமிழ் பேசும் மக்கள் வாழும் இடங்களிற்கு அதிகாரப் பகிர்வினை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவ்வாறு மாகாண சபை வகுக்கப்பட்டிருந்தமை தெரியவருகின்றது.

    எமது மாகாணம் போரினால் பாதிக்கப்பட்டு இருப்பதினால், ஏனைய மாகாண மக்களுடன் சமமாக வாழ்வதற்கு எமது மாகாணத்திற்காக ஒதுக்கப்படும் நிதி மற்றைய மாகாணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படும் நிதித்தொகையினை விட பன்மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும்.

     'ஒரு தாய்க்கு ஒன்பது குழந்தைகள் இருக்கும்போது அதில் ஒரு குழந்தை சற்று ஊட்டக்குறைவுடன் காணப்பட்டால், தாயானவள் அந்த குழந்தையை சற்றுக் கூடிய சிரத்தையுடன் கவனிப்பாள்'. 

    எனவே அரசாங்கம் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாண சபைக்கு போதியளவு நிதி உதவிகளை ஒதுக்குவது சிறந்ததென்று கருதுகின்றேன்.

    மத்திய அரசாங்கம் அதிகாரப் பரவலின் அடிப்படையினைக் கைவிட்டு, மாகாணங்கள் மத்திய அரசை முதன்மைப்படுத்தி தமக்கு அனுசரணையாகவே இயங்க வேண்டும் என்று கூறுவதை நாங்கள் அவதானிக்கின்றோம். 

    அதிகாரப்பகிர்வானது மத்திய அரசாங்கத்தைப் பலப்படுத்தவோ அதனை முதன்மைப்படுத்தவோ வகுக்கப்பட்ட ஒரு உபாயமல்ல. மாறாக மத்திய அரசாங்கம் வலிமை குறைந்த மாகாண மக்களை எழுப்பி தங்கள் கால்களில் அவர்களை நிற்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்திலே வகுக்கப்பட்டது.

    எனவே எமது மாகாண சபைகளுக்கு மத்திய அரசாங்கம் அனுசரணையாக இயங்க வேண்டுமே தவிர மத்திய அரசாங்கத்திற்கு தோள்கொடுக்க மாகாண சபைகள் முன்வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது அதிகாரப்பரவலின் தார்ப்பரியத்தினை மத்திய அரசாங்கம் அறிய முற்படவில்லை என்ற கருத்தையே வெளிப்படுத்தும்.

    வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு அத்தியாவசியமான உரித்துக்கள் மற்றைய ஏழு மாகாணங்களுக்கும் தேவைப்படாமல் இருக்கலாம். காணி சம்பந்தமாகவும் மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் மாகாண சபை ஒன்று எடுக்கவேண்டிய பொறுப்பு அந்தந்த மாகாண சபையின் நிலையை  ஒட்டியதே தவிர சகலருக்கும் ஒரேநிலை இருப்பதாக கொள்வது தவறாகும். 

    வடமாகாணத்தின் காணிகள்  சூறையாடப்படுவதுடன், மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு முகங்கொடுக்கவே சட்டவாக்கங்களில் மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களும் காணி அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் சட்டப்படி நடைமுறைப்படுத்தவுள்ளோம். 

    எமது மத்திய அரசாங்கம் வடமாகாண சபைக்கு இவ்வாறான அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவேண்டிய அத்தியாவசியத்தை உணர்ந்து செயற்படுவார்கள் என்று நம்புகின்றேன்.

    13 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் மத்திய அரசாங்கத்திற்கு போதிய செல்வாக்கை கைவசம் வைத்துக்கொண்டே மேற்படி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றையாவது வழங்குவதில் தயக்கங்காட்டக் கூடாது. 
    தயக்கம் காட்டினால் சிறுபான்மை இன மக்கள் தமது வாழ்க்கையை சீரமைத்துச் செல்வதை மத்திய அரசாங்கம் விரும்பவில்லை என்ற ஒரு கருத்தை உலகறியச் செய்து விடும். எனவே இந்த பழிக்கு ஆளாவதைத் தவிர்த்து மத்திய அரசாங்கம் செயற்படவேண்டும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 வயதினை உடைய இரண்டு சிறுமிகள் பாலியல் துஷ் பிரயோ கத்திற்கு ட்படுத்தப்பட்டுள்ளார்கள்

    யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 வயதினை உடைய இரண்டு சிறுமிகள் பாலியல் துஷ் பிரயோ கத்திற்கு ட்படுத்தப்பட்டுள்ளார்கள். உரும்பிராய் கிழக்கு மற்றும் ஊர்காவற்றுறைநாரந்தனைப் பகுதிகளைச் சேரந்த இரு சிறுமிகளே மேற்படி சம்பவங்களில் பாலியல் துஷ்பி ரயோகத்திற்குட்படுத்தப்பட்டவர்கள் ஆவர்.கடந்த 14 ஆம் திகதி திங்கட்கிழமை உரும்பிராய் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை அவருடன் காதல் தொடர்பு கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
    இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது வழக்கினை விசாரணைக்குட்படுத்திய நீதவான், அவரை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
    அதே போன்று, ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி 14 வயதும் 8 மாதங்களும் உடைய சிறுமி ஒருவர் அதே இடத்தினைச் சேர்ந்த  21 வயது இளைஞரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ட்படுத்தப்பட்டுள்ளார்.
    இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது வழக்கினை விசாரணை செய்த நீதவான் அவரை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
    - See more at: http://thinakkural.lk/article.php?local/wknf8ryexn11580c048b3a434501oqaza4e49e655c1247efb389cecxrzhz#sthash.U0zLsne8.dpuf

    பாலியல் தொழிலில் கேந்திர நிலையமாக மாறி வரும் வட மாகாணம்

    வட மாகாணத்தில் பாலியல் தொழில் மிகுந்த முனைப்புடன் வளர்ச்சியடைந்துள்ளதாக ஐ.ஆர்.ஐ.என். தகவல் வெளியிட்டுள்ளது.
    முன்னைய யுத்த வலயத்தின் பெரும்பான்மையான பெண்கள் குடும்பத் தலைமைப் பொறுப்பை வகித்து வருகின்றனர்.
    யுத்ததினால் கணவனை இழந்த, காணாமல் போன அல்லது கைது செய்யப்பட்ட பல பெண்கள் குடும்பச் சுமையை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
    போதியளவு வாழ்வாதார வழிகள் இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
    வடக்கில் சுமார் 7000 பெண்கள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
    யுத்தத்தில் கணவனை இழந்த அல்லது காணாமல் போன பல குடும்பத் தலைவிகள் விருப்பிமின்றியேனும் பாலியல் தொழிலை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
    2012ம் ஆண்டு அரசாங்க மதிப்பீடுகளின் அடிப்படையில் வடக்கில் 59000 குடும்பங்களுக்கு பெண்கள் தலைமை தாங்குகின்றனர்.
    தங்களது கணவர், சகோதரர், தந்தைமார் சுமந்த பொருளாதாரச் சுமையையே இவர்கள் இவ்வாறு சுமக்கின்றனர்.
    வறுமை மற்றும் வாழ்வாதார வழிகளில் காணப்படும் வரையறுக்கப்பட்ட தன்மை பெண்களை வர்த்தக ரீதியான பாலியல் தொழில் நோக்கி உந்துகின்றது.
    வடக்கில் அதிகளவில் இராணுவத்தினர் பிரசன்னமாகியிருப்பதும், அபிவிருத்திப் பணிகளுக்காக அதிகளவான தெற்கைச் சேர்ந்த ஆண்கள் வடக்கை நோக்கி நகர்ந்துள்ளதும் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட களம் அமைத்துக் கொடுள்ளது என பாலியல் தொழிலாளர் குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் தலைவி விசாக தர்மதாச தெரிவித்துள்ளார்.
    யுத்த நிறைவைத் தொடர்ந்து அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் வடக்கை நோக்கிச் சென்று தங்களது சொந்தங்களை பார்வையிட்டு வருவதாகவும் இதுவும் வர்த்தக ரீதியான பாலியல் தொழில் சூடுபிடிக்க மற்றுமொரு ஏதுவாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    கடுமையான ஜாதி மற்றும் வகுப்புக் கலாச்சாரத்தை கொண்டமைந்த வடக்கில் பாலியல் தொழில் தீண்டத் தகாத விடயமாக காணப்பட்டு வந்தது.
    எனினும், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அதிகளவான ஆண்களை குடும்பங்கள் இழக்க நேரிட்டதனால் சமூக கலாச்சார கட்டுப்பாடுகள் களையப்பட்டு, பாலியல் தொழிலை அங்கீகரிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
    கல்வி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை மாறி இன்று பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
    இலங்கையில் இன்னமும் பாலியல் தொழில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை.
    பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் விவகாரத்தை சமூக் காரணிகளுக்காக தொடர்ந்தும் மூடி மறைப்பது பொருத்தமாகாது என மன்னார் மகளிர் அபிவிருத்தி மையத்தின் ஸ்தாபகர் செரீன் தாருர் தெரிவித்துள்ளார்.
    பெண்களுக்கான வருமான வழிகளை அமைத்துக்கொடுப்பதன் மூலம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதனை தடுக்க முடியும் என யாழ்ப்பாண மகளிர் அபிவிருத்தி மையத்தின் தலைவி சரோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
    வேறும் தொழிலில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கப்பட்ட போதிலும் அவர்களுக்கு வேறு வழிகிடையாது என தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    எனவே பாதுகாப்பான பாலுறவு தொடர்பில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
    இந்த விடயம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என சமூக சேவைகள் பிரதி அமைச்சர் சந்திரசிறி சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

    தேசிய ரீதியில் மூன்றாமிடத்தினைப் பெற்றுக் கொண்ட மத்திய கல்லூரி நாடக அணி

    photo (8)கொழும்பு றோயல்கல்லூரி தமிழ் நாடகமன்றம் நடாத்திய அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நாடக அணி தேசியத்தில் மூன்றாமிடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளது.
    கொழும்பு றோயல் கல்லூரியின் நாடக மன்றத்தினால் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் வருடாந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற நாடகப்போட்டியில் இவ்வாண்டுக்கான தேசிய மட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் விடியலின் பாதை நாடகம் வெற்றி பெற்றுக் கொண்டுள்ளதுடன் சிறந்த துனை நடிகனுக்கான தேசிய விருததினையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
    சிறந்த துணை நடிகராக பிரவீண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நாடகத்திற்கான நெறியாள்கை வழிப்படுத்தலை மத்திய கல்லூரியின் நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் எஸ்ரி.குமரன் வழங்கியுள்ளார்.
    இந்நாடகத்தில் நடிகர்களாக அபிசேக், சண்முகப்பிரியன், கயேந்திரன், அபினாஸ், கனோஜன், ஜனார்த்தன், தர்மிசன், சுகிர்தன், லக்ஸன், பிரவீன், சதீஸ்குமார், பெல்ஜியோ, தர்சன், சாள்செபஸ்ரியான், சன்சயன், விதுர்சன், அட்சரன், சுரேஸ்மோகன், பெனற் ஆகியோர் நடித்துள்ளனர். இசையினை கோகில் பிரசாத் வழங்கியுள்ளார்.

    யாழ்ப்பாணக் கலாசாரம், அதிர்ச்சித் தகவல்களும் அம்பலமாகும் உண்மைகளும்

    முப்பது வருடகால யுத்த துன்பியல் வாழ்க்கையைக் கடந்து மற்றுமொரு பரிமாணத்தில் குடாநாடு காலடி எடுத்துவைத்திருக்கும் காலம் இது. எதிர்காலத்தை ஏக்கத்தோடு பார்த்த காலம் தள்ளிப்போய் எதிர்பார்ப்புகளை மனதில் விதைத்து நாளைய பொழுதுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது நம் தமிழச் சமூகம்.
    இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் முளைவிட்டு எமது சமூகத்தின் ஆணிவேரையே அசைக்க முற்பட்டுக் கொண்டிருக்கும் புதியதொரு பிரச்சினையாக கலாசார சீர்கேடு மாறியுள்ளது.
    ஆங்காங்கே நடக்கும் விபச்சாரம், பள்ளிக்குச் செல்லும் இளம் பெண்களின் கர்ப்பம் தரிப்பு வீதம் அதிகரிப்பு, சூறையாடப்படும் சிறுவர் வாழ்க்கை, கயவர்களின் கையில் சிக்கித் தவிக்கும் திருமணமாகாத பெண்கள், தென்னிலங்கை மக்களின் வருகை மற்றும் வெளிநாட்டு மோகம் ஏற்படுத்தியுள்ள நாகரிகத் தாக்கம் என இதனை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.
    இப்போது அடிக்கடி சூடாகப் பேசப்படும் விடயம்தான் யாழில் கலாசார சீர்கேடு. இதன் உண்மை நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள நாம் அங்குசென்றபோது எமக்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
    ஆம்..! யாழ் மாவட்டத்தில் பதின்மூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரையான (பதின்ம வயது) பள்ளிப்பருவ இளம் பெண்கள் 211 பேர் கடந்த ஐந்து மாதங்களில் கர்ப்பமாகியுள்ளனர்.
    இவர்களில் 90 வீதமானோர் பாடசாலைக்குச் செல்லும் மாணவியர். இதே காலப்பகுதியில் திருமணமாகாத 69 பேர் கர்ப்பம் தரித்துள்ளனர். அது தவிர 242 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன.
    கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 61 வீத அதிகரிப்பினை இந்தப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என அறிந்துகொள்ள நாம் முயற்சித்ததுடன் இது குறித்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தாய் சேய் நல வைத்திய அதிகாரி சிவசங்கர் திருமகள், வழக்கறிஞர் பொன். பூலோகசிங்கம் ஆகியோருடனும் யாழ். மாநகர முதல்வர் யோ.பற்குணராசாவுடனும் கலந்துரையாடினோம்.

    சிவசங்கர் திருமகள்
    தாய் சேய் நல வைத்திய அதிகாரி – யாழ். மாவட்ட சுகாதாரப் பணிமனை
    “யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக பாடசாலை மாணவர்களிடத்தே நன்னடத்தை பேணப்படுவதற்கான ஒழுங்குகளை செய்துவருகிறோம்.
    ஆயினும் பாடசாலை மாணவர்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சிலர் கர்ப்பம் தரிப்பதும் மிகவும் கவலைக்குரிய விடயம். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
    1. மேலதிக வகுப்புகள் எனக் கூறி இளவயதுப் பெண்கள் தவறான இடங்களுக்குச் செல்லுதல் கண்காணிக்கப்படுதல்
    2. அளவுக்கதிகமான சுதந்திரம் மட்டுப்படுத்தப்படல்
    3.பிள்ளைகளின் நண்பர்களுடைய பெற்றோருடன் உறவினைப் பேணுதல்
    4.ஆசிரியர் – மாணவர் உறவில் நீண்ட விரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படுதல் (ஒவ்வொரு ஆசிரியரும் மாணவரை தன்னுடைய பிள்ளை என நினைத்தல் அவசியம்)
    5.வேலையின்றித் திரியும் இளைஞர்களின் அடாவடித்தனங்களை மட்டுப்படுத்துதல்
    6.லொட்ஜ் உரிமையாளர்களுக்குரிய சட்டதிட்டங்கள் வகுக்கப்படுதல்
    7.பொதுக் கட்டிடங்களுக்கு அண்மித்ததாக மதுபானசாலைகள், விடுதிகள் அமைக்கப்படுவது தொடர்பான சட்டம் முன்மொழியப்படுதல்
    8.பெண்கள் பாதுகாப்புக்கென பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்புப் பிரிவு உருவாக்கப்படுதல்
    9.வாழ்க்கைத் தேர்ச்சி பாடசாலைகளில் உரிய முறையில் போதிக்கப்படுதல்
    10.பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நடைமுறையிலிருந்து சமுதாயம் விடுபடுதல்
    ஆகியவை அத்தியாவசியமானவையாகும்.
    மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் மாற்றத்தை நினைக்கையில் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சமே மேலிடுகிறது.
    கர்ப்பம் தரித்துள்ள பள்ளி மாணவர்களை பார்த்து நான் பலதடவை கண்ணீர் வடித்திருக்கிறேன். இதனால் சட்டவிரோத கருத்தரிப்புகளும் அதிகரிக்கின்றன.
    திருமணம் முடித்தோரும் சட்டவிரோத கருத்தரிப்புகளை செய்துகொள்கின்றனர். இதன் பின்விளைவுகள் குறித்துத் தெரியாததால் நாளடைவில் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவருகிறது.
    எது எவ்வாறாயினும் எங்களால் (பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை) இயன்றளவான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்”

    வழக்கறிஞர் பொன்.பூலோகசிங்கம்
    “இன்று யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் இருக்கின்ற நீதிமன்றங்களுக்கு வருகின்ற வழக்குகள் எங்களுக்கு யாழ்ப்பாண சமூகத்தினுடைய தற்போதையை நிலையை வெளிச்சமிட்டுக்காட்டுவதாக இருக்கின்றது.
    நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதைப் போல நாங்கள் வெளிப்படையாகக் காண்கின்ற யாழ்ப்பாணத்து கட்டமைப்பு பெருமளவில் இன்று சீர்குலைந்துவிட்டது.
    அதற்கு ஆதாரமாக யாழ்ப்பாண குடாநாட்டில் இருக்கின்ற நீதிமன்றங்களுக்கு வருகின்ற குற்றவியல் வழக்குகள் பெரும்பாலும் சீர்குலைந்துபோயிருக்கின்ற யாழ் சமூகத்தின் கட்டமைப்பின் மறுபக்கத்தை எங்களுக்கு காட்டுகின்றன.
    வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தின் மத்தியில் நீண்டகாலமாக பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்த கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள், வாழ்வியல் அம்சங்சங்கள், வாழ்க்கையின் தேவைப்பாடுகள், இவை எல்லாமே ஏதோ ஒருவகையில் வித்தியாசமான தடத்தில் செல்வதாகப் பார்க்கிறேன்.
    யாழ்.மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகளும் பாலியல் ரீதியிலான வழக்குகளுமே முன்னிலை வகிக்கின்றன. பாலியல் சம்பந்தமான பிரச்சினைகள் எமக்கு அனுகூலமான விடயம் அல்ல.
    ஏனைய மாவட்டங்களை விட பாலியல் பிரச்சினைகளில் யாழ் மாவட்டம் குறைவான புள்ளிவிபரங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் கடந்த காலங்களை விட தற்போது அதிகரித்து வருகின்றமையை நாம் சிந்திக்க வேண்டும்.
    மிகச்சிறந்த கலாசாரப் பண்பாடுடைய தமிழ்ச் சமூகம் எனப்போற்றப்படும் எமது கலாசாரத்துக்கு இது ஆரோக்கியமாக அமையாது என்பதே எனது கருத்து”

    யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோ. பற்குணராசா
     “பரப்பரப்பாக பேசப்படும் விடயமாக கலாசார சீரழிவு காணப்படுகின்றது என்பதை இணையத்தளங்களினூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். முப்பது வருடகால போரின் பின்னர் அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்ற இளைஞர்கள் இன்று சரி பிழைக்கு அப்பால் வேலைவாய்ப்பின்மையினூடாக பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
    நீங்கள் குறிப்பிடும் இந்நிலைக்கு இது முக்கியமான காரணம். போர்க்காலச் சூழல் முழுமையான கல்வியை வழங்கத் தவறியது. இளைஞர்களின் நிலை கட்டுங்கடங்காத வகையில் உள்ளது.
    இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்கி சரியான முறையில் வழிநடத்துவதன் மூலம் நல்ல வகையில் திசை திருப்பலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டு விஷமத்தனமான பிரசாரங்களில் ஈடுபடாமல் கூட்டு முயற்சியில் பொறுப்புணர்வுடன் இவர்கள் வழிநடத்தப்பட வேண்டும்.
    யாழில் இடம்பெறும் சமூக சீர்கேடுகள் மூடிமறைக்கப்படுகின்றனவா?
    ஏன் மூடி மறைக்க வேண்டும்? இதனை நீங்கள் வெளிப்படையாகக் கண்டுகொண்டிருக்கிறீர்கள். இவ்வாறான சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் நடைபெறுவதில்லை. கொழும்பில் இதனை விட சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஏன் உலகளாவிய ரீதியில் இப்பிரச்சினை தலைதூக்கி நிற்கிறது.
    ஆனால் யாழில் ஒரு சிறு விடயம் ஏற்படுகின்ற போது அதனை விசுவரூபமாக பிரசாரப்படுத்தப்படுவது ஏன் என்று தெரியவில்லை.
    இங்கு உள்ள லொட்ஜ்களில் பாடசாலை மாணவர்களின் வருகை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அது எந்த வகையில் உண்மை? இந்த லொட்ஜ்கள் மாநகர சபை அனுமதியுடன்தான் நடத்தப்படுகின்றனவா?எனக் கேட்டபோது…
    லொட்ஜ்கள் உண்மையிலேயே எமது அனுமதியின்றித் தான் நடத்தப்படுகின்றன. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரின் வீடுகளே இன்று லொட்ஜ்களாக உபயோகிக்கப்படுகின்றன.
    அவற்றை உண்மையான சட்ட வரைவுக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்றால் உரிமையாளர்கள் அவ்விடத்தில் இருக்க வேண்டும். அதே நேரதத்தில் அந்த லொட்ஜ்கள் விடுதிகளாக்கப்படுவதற்குரிய அனுமதியை சுற்றுலாத்துறையினர் வழங்க வேண்டும்.
    ஆனால் அவ்வாறு இங்கு செயற்படுத்தப்படவில்லை. அவ்வாறான சட்டதிட்டங்களை நாம் செயற்படுத்தும்போது வேலைவாய்ப்பு குறித்து லொட்ஜ் நடத்துநர்கள் கவலை கொள்கிறார்கள்.
    ஆயினும் உரிய வகையில் அவற்றைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளோம் மற்றும் ஒருசில மாணவர்கள் லொட்ஜ்களுக்கு சென்று வருவதால் ஒட்டுமொத்த பாடசாலையின் நன்மதிப்பும் கெடுகிறது.
    ஒருசிலர் விடும் தவறால் ஒட்டுமொத்த யாழ்ப்பாணக் கலாசாரமும் சீர்கெடுகிறது எனக் கூற முடியாது. இதனைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்” என்றார்.
    தமிழ்ச் சமூகத்தை பின்னடையச் செய்வதற்கு சில சக்திகளால் திட்டமிட்டுப் பரப்பப்படும் விடயம் தான் இந்த சமுதாயச் சீர்கேடு குறித்த வதந்தி என சமுதாயத்தின் ஒரு தரப்பு கூறுகிறது.
    யாழில் மட்டுந்தான் பாலியல் பிரச்சினைகள் நடக்கின்றனவா? எனக் கேட்கிறது மற்றுமொரு தரப்பு. இது மூடி மறைக்கப்படுமானால் நமக்குத் தெரியாமல் வளர்க்கப்பட்டுவிடும்.
    ஆதலால் உண்மையை வெளிப்படையாகக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறது இன்னொரு தரப்பு. இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வின்மையுமே அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இந்த இழி நிலைக்குக் காரணம் என்பதே பொதுவான கருத்தாக நிலவுகிறது.
    தென்னிலங்கையர்களின் வருகையோடு விபச்சாரத்தை தொழிலாக செய்யும் பாலியல் தொழிலாளர்களின் வருகை யாழில் அதிகரித்துள்ளமையை நாம் வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது.
    அவர்கள் பாதுகாப்பான உறவினை மேற்கொள்கிறார்களா என்பதே இங்கு கேள்விக்குறியாகும். அதனை விட யுவதிகளும் பாடசாலை மாணவர்களும் இந்த வட்டத்துக்குள் உள்வாங்கப்படுவது கவலைக்குரியதே.
    இவர்கள் மூன்றாவது சக்தியினூடாக பலவந்தமாக இதற்கு ஆளாக்கப்படுகிறார்களா அல்லது தாமாகவே விரும்பி ஈடுபடுகிறார்களா என்பதை அறிந்துகொள்ள யாழிலுள்ள சகோதர மொழி பேசும் லொட்ஜ் உரிமையாளருடன் உரையாடினோம்.
    “யாழ்ப்பாண நகரத்தில் இரவு ஏழு மணியானால் போதும் எனது கைத்தொலைபேசி அலறிக்கொண்டுதான் இருக்கும். அண்ணா ரூம் இருக்கிறதா? வரலாமா? என்று அடிக்கடி கேட்பார்கள்.
    பாடசாலை மாணவர்கள் வருகிறார்கள். நான் இல்லை என்று சொல்லவில்லை. பல சந்தர்ப்பங்களில் நான் அவர்களை ஏசி அனுப்பியிருக்கிறேன். மிக இளவயதுப் பெண்கள் இங்கு வந்து தாமாகவே முன்வந்து தமது அடையாள அட்டையைக் கொடுத்து பதிவுசெய்யச் சொல்வதும் உண்டு.
    வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழ் இளைஞர்கள் இங்கு சிங்களப் பெண்களை அழைத்து வருவார்கள். பணம் படைத்த பலர் அறையின் வாடகையை விட மேலதிகமாக கொடுப்பதும் உண்டு” என்றார் அவர்.
    இவ்வாறு நாம் உரையாடிய லொட்ஜ்கள் பலவற்றின் உரிமையாளர்களும் இதேபோன்ற பதிலையே எமக்கு அளித்தனர். தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக இணையத்தளங்கள், இணைய அரட்டை, சமூக வலையமைப்புகள் உட்பட ஏனைய இணைய வசதிகளை பயன்படுத்திக்கொள்ளும் இளைஞர்கள் தவறான கட்டமைப்புக்குள் தாமாகவே உள்வாங்கப்படுகின்றனர்.
    இதனால் அவர்களுடைய சிந்தனையோட்டம் மாறுபடுகின்றது. அதன் பின்விளைவாக பாலியல் ரீதியிpலான இயல்பான தூண்டுதலுக்கு உள்ளாகி குற்றம் புரிகின்றனர்.
    இதற்கு உதாரணமாக தாவடிப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற சம்பவத்தினைக் குறிப்பிடலாம். தமது சொந்த கிராமத்திலிருந்து சுமார் 32 கிலோ மீற்றர் தூரம் வந்த 16 வயதான யுவதிகள் இருவர் 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களுடன் பாலியல் உறவுகொண்டுள்ளனர்.
    இவ்விடயம் பெற்றோரினூடாக வழக்கு விசாரணைக்கென நீதிமன்றுக்கு வந்துள்ளது. பாலியல் துன்புறுத்தலின் 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 16 வயது அல்லது அதற்குக் கீழ்ப்பட்ட பெண்களுடன் விரும்பியோ விரும்பாமலோ பாலியல் ரீதியிலாக தொடர்புகொண்டால் சட்டப்படி குற்றமாகும்.
    ஆதலால் அந்த இளைஞர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. எனினும் இதன் பின்புலத்தில் நவீன தொடர்பாடல் முறைகளே காரணமாக அமைந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
    இவ்வாறு அடிக்கடி பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணமே உள்ளன. அத்துடன் யுத்தத்தின் பின்னர் புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட பாழடைந்த வீடுகளை இளைஞர்கள் தமது சட்டவிரோத தேவைகளுக்கென பயன்படுத்திக்கொள்கின்றனர்.
    இவ்வாறான இளைஞர்களால் அப்பாவி யுவதிகள் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டியமை அவசியமாகும். 2010 ஆம் ஆண்டு திருமணமாகாத கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 98 ஆக இருந்துள்ளது.
    இவ்வருடம் ஐந்து மாதங்களில் மாத்திரம் 69 பேர் கர்ப்பம் தரித்துள்ளனர். அதேபோன்று 2010 இல் சிறுவர் துஷ்பிரயோகங்கள் 175 ஆக பதிவாகியுள்ளது.
    இவ்வாண்டு ஐந்து மாதங்களில் இது 242 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலை தொடருமானால் மிகப்பெரிய சமூகச் சீர்கேட்டினை எதிர்நோக்க வேண்டிய அபாயம் உள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை.
    அகன்று பரந்து விரிந்த அழகான மரம்போல் நமது சமுதாயம் காட்சியளித்தாலும் இவ்வாறான சமூகச் சீர்கேடுகள் எங்கோ ஒரு மூலையில் எமது ஆணிவேரை அரித்துக்கொண்டுதான் இருக்கும் என்பது நிதர்சனம்.
    நடைமுறையைக் கவனமாக நோக்குகையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், சமூக அக்கறையாளர்கள், அரச தரப்பினர் உட்பட அனைவருமே பேதங்களின்றி இவ்விடயத்தில் ஒருமித்த மனதுடன் கைகோர்ப்பதே இன்றைய தேவையாக உள்ளது
     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info